இலியானா: யாரை இழந்தாலும் உங்களை நீங்கள் இழக்காதீர்கள்

உங்கள் வாழ்க்கையில் இருந்து பெற்றோர், துணைவர்கள், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என  யார் பிரிந்துசென்றாலும் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாதீர்கள். உங்களை நீங்களே நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று தத்துவம் பேசியுள்ளார் நடிகை இலியானா. இந்தக் கருத்துகளை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ‘கேடி’, விஜய்யின் ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் இலியானா. 

தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரைக் காதலித்து வந்தார். 

தனது காதல் பற்றி வெளிப்படையாக இலியானா கூறவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரபரப்பூட்டும் வகையில் பரவின. 

ஒருசமயத்தில் அவர்கள் ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகவும் பாலிவுட் ஊடகங்களில்  தகவல்கள் வெளிவந்தன.  

இந்நிலையில் இலியானாவுக்கும் ஆண்ட்ருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரும் இன்ஸ்டகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ள இலியானா, தற்போது சிரஞ்சீவியுடன் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

இதற்கிடையே கடந்த ஜூலை 31ஆம் தேதி ஆண்ட்ரு தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, அவருக்கு காதல் தகவல் ஒன்றை இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்த இலியானா, அதையும் ஆண்ட்ருவின் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து  நீக்கி உள்ளார். 

அதையடுத்து இப்போது ஒரு புதுப்பதிவை  போட்டுள்ள இலியானா, “வாழ்க்கையில் நீங்கள் ஏதோ ஒரு நேரத்தில்  நண்பர்கள், குடும்பத்தினர், துணைவரை இழக்கலாம்.

“ஆனால் உங்கள் வாழ்க்கையில் உங்களைவிட்டு யார் பிரிந்தாலும் உங்களை மட்டும் நீங்கள் இழந்துவிடாதீர்கள். 

“உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் நேசிக்கப்படாதவராக உணரும்போது உங்களை நீங்களே நேசித்துக் கொள்ள பழகிக்கொள்ளுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.