ரகுல்: நெய் சேர்த்து ‘புல்லட்’ காபி பருகுவேன்

சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் ரகுல்பிரீத் சிங். ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரகுல்பிரீத் சிங் திரைச்செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள  பேட்டியில், “எனக்கு ‘ஜிம்’மில் இருப்பது பிடிக்கும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒரு கப் காபியில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து ‘புல்லட்’ காபி குடிப்பேன். 

“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்களில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. 

“நான் ஏற்கனவே நடித்த சில படங்களில் கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே இருந்தன. 

“இந்தப் படங்களில் முதலீடு செய்தால் கண்டிப்பாக பணம் திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு தயாரிப்பாளர்கள் படத்தை எடுத்தனர். தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்தால்தான் மீண்டும் அவர்களால் படங்களை எடுக்கமுடியும். எனக்கு விருது வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த மாதிரி வேடங்களில் இப்போதே நடித்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரம் வரும்போது விருது படங்களில் நடிப்பேன்,” என்று கூறினார்.