மோகன்லால் ஜோடியாகும் திரிஷா

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து இப்போது மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை திரிஷா. 

2002ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நாயகியாக நீடித்து நடித்து வரும் திரிஷா, இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் நிறைவேறாத  ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். 

இந்நிலையில் ரஜினிகாந்தை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் அவரது ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷாவை நடிக்கவைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

‘த்ரிஷ்யம்’ போலவே இந்த புதிய படமும் திகிலூட்டும் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்தப் படம் திரிஷாவின் இரண்டாவது மலையாளப் படமாகும். ஏற்கெனவே இவர் நிவின் பாலியுடன் ‘ஹே ஜூடு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி திரிஷாவை மேலும் உச்சத்துக்கு கொண்டு போன நிலையில், இந்தப் படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் மறுபதிப்பு செய்கின்றனர்.

திரிஷா, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ளார். தற்போது ‘பரமபத விளையாட்டு’, ‘ராங்கி’, ‘சுகர்’, ‘1818’ ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

‘ராங்கி’ படம் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில் உருவாகிறது. ‘சுகர்’ படத்தில் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார். அடுத்து மோகன்லால் ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருக்கும் ஜீத்து ஜோசப் தமிழில் கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர். 

‘த்ரிஷ்யம்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஒரு எதிர்பார்ப்பும் பேரார்வமும் தொத்திக்கொண்டுள்ளது.