பனி பூமியில் முகம் சுளிக்காமல் நடித்து அசத்திய நாயகன், நாயகி

வினோத் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘ரங்கா’. இது காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் நிறைந்த படைப்பாக உருவாகி வருகிறது என்கிறார் இயக்குநர்.

சிபிராஜ் ஜோடியாக நிகிலா நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘கிடாரி’யில் இவரைக் காணலாம்.

சென்னையைச் சேர்ந்த சிபியும் நிகிலாவும் காதல் வயப்படுகிறார்கள். இருவருக்கும் திருமணமும் நடந்தேறுகிறது. தேனிலவுக்காக குளுமணாலி போன்ற இடத்திற்குச் செல்கிறார்கள். முகம் தெரியாத இடம், இடமறியாத நேரம், மொழி வசப்படாத பொழுதில் திடீரென ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படிச் சமாளித்து மீண்டு வருகிறார்கள் என்பது தான் கதையாம்.

சிபிராஜ் குறித்து?

“நன்கு மெருகேறி உள்ளார். முன்னை விட மிகவும்  நுணுக்கமாகச் செயல்படுகிறார். ஒரு படத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்கிற நேர்த்தி அவருக்கு வந்துள்ளது. 

“ஒரு விஷயத்தைத் தொட்டுப் பேச ஆரம்பித்தால் அவரிடம் வந்து விழுகிற தெளிவு ஆச்சர்யப்பட வைக்கிறது. அவரது ஈடுபாடு குறித்து சொல்லி மாளாது. எந்த கஷ்டத்தையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் மிகுந்த ஈடுபாடு காட்டியதை மறக்க இயலாது. நல்ல கலைஞனுக்கு இந்த குணாதியசம் தான் அழகு சேர்க்கும்.”

திகில் கதையை இயக்குவது சுலபமா?

“திகில் படத்தைக் காண வரும் ரசிகர்களை திரையரங்கில் இரண்டு மணி நேரம் உட்கார வைப்பது சுலபமான வேலையல்ல. அதை நன்கு உணர்ந்து இருக்கிறோம். எனவே கதையில் நிறைய கவனம் செலுத்தினோம். 

“ஒரு கதைக்காக சில ஆரம்பப்புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். வெறும் திகில் படமாக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டுவர முடிந்தது. அந்த வகையில் திருப்தியாக உணர்கிறோம்.”

சதீஷ், மனோபாலா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனராம். மோனிஷ், ஆருஷ், இர்பான் என சிபிராஜுடன் மூன்று வில்லன்கள் மோத உள்ளனர்.

காஷ்மீர் போன்ற ஓர் அழகான இடத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பது வேதனை தருவதாகக் குறிப்பிடுகிறார் இயக்குநர் வினோத்.

“இயற்கையும் பசுமையும் நிறைந்த காஷ்மீரை பார்க்கும் போது அங்கிருந்து கிளம்பவே மனம் வராது. சிபியும் நிகிலாவும் உறைய வைக்கும் பணியில் முகம் கோணாமல் நடித்தனர்.

“படக்குழுவினர் நூறு மடங்கு உழைப்பை வெளிப்படுத்தினால், இவர்கள் இருவரும் அதைவிட அதிக உழைப்பைக் கொட்டினர். இந்தப் படம் வெற்றி அடைவதே இந்த கடும் உழைப்புக்கான சன்மானமாக இருக்கும்,” என்கிறார் வினோத்.
 

Loading...
Load next