இயக்குநர்கள் தேடும் நாயகி

இயக்குநர்கள் தேடும் நாயகி

3 mins read
0846e32a-90f7-41bd-a58d-2e0f6d8f3396
-

நல்ல கதைக்களம், கனமான கதாபாத்திரம் என்றால் இயக்குநர்கள் முதலில் தேடுவது ஐஸ்வர்யா ராஜேஷைத்தான். 'கனா' படம் வெளியானபிறகு இவரது சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கிறது.

பெரிய நாயகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வருகிறதாம். இந்நிலையில் குறைந்த பொருட் செலவில் தயாராகும் படங்களிலும் நடிக்க அவர் தயங்குவதில்லை.

"என்னைப் பொறுத்தவரை கதைதான் முக்கியம். அதனால் எவ்வளவு செலவிட்டு ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள் என்று நான் கவனிப்பதில்லை.

"நான் இன்னும் கூட வளர்ந்து வரும் நடிகைதான். நான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரே ஒரு படம் வெற்றி பெற்று விட்டதாலேயே உச்சத்திற்கு சென்றுவிட்ட தாக கருதமாட்டேன்," என்று பக்குவமாகவும் முதிர்ச்சியுடனும் பேசுகிறார் ஐஸ்வர்யா.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'மெய்' படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்ததாம்.

மருத்துவத் துறையில் நிகழும் குற்றங்களை அலசும் கதையை மையப்படுத்தி இப்படம் உருவானது.

சமூகத்துக்குத் தேவையான முக்கியமான ஒரு செய்தியை இப்படத்தின் மூலம் தெரிவித்தது மன நிறைவைத் தந்ததாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா.

ஏற்கெனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தனியார் மருத்துவமனையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை விவரித்திருந்தார் ஐஸ்வர்யா.

"சாதாரண காய்ச்சலுக்கு பெருந்தொகையை அந்த மருத்துவமனை பிடுங்கியது. என்னால் பணம் செலுத்த முடியாததால் நான் புகார் எழுப்பவில்லை.

"ஆனால், தேவையின்றி அந்தக் கட்டணத்தை வசூலித்தனர். அதனால் இரு தினங்கள் தூக்கமின்றி தவித்தேன். எனக்கே இப்படி என்றால், நடுத்தர வர்க்க குடும்பங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். நான் செலுத்திய தொகை அவர்களது ஆறு மாத சம்பளத்துக்கு இணையானது. 'மெய்' படம் இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா.

தற்போது 'தனா' படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், இதுவும் தனக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதித்துத் தரும் என்கிறார். புது இயக்குநர்கள் அற்புதமான கதைக் களங்களை அமைப்பதாகவும் பாராட்டுகிறார்.

ஐஸ்வர்யாவின் நேரந் தவறாமை கோடம்பாக்கத்தினரால் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

"காலை ஏழு மணிக்குப் படப்பிடிப்பு என்றால் வீட்டிலிருந்து 5.30 மணிக்கே புறப்பட்டு விடுவேன். இதை நினைத்து சலித்துக் கொள்வதில்லை. ஏனெனில் இதே சினிமா துறையில் மற்ற பணிகளைக் கவனிக்கும் தொழிலாளர்கள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் வேலையைத் துவங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

"புதிய இயக்குநர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்புடனும் அழுத்தத்துடனும் வலம் வருவார்கள். அதனால் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்பதால்தான் அத்தகைய படங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன்.

"மேலும் உடல்நலம் சரியில்லை என்றாலும், படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு இதுவும் ஒரு காரணம். படப்பிடிப்பு ரத்தானால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதுடன் புது இயக்குநர்களின் கவலையும் மன அழுத்தமும் அதிகரித்து விடும். அவ்வாறு நடக்கக்கூடாது என்பதே எனது விருப்பம்," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கொசுறு: நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் குறும்படங்கள், இணையத் தொடர்கள் என எதிலும் நடிக்கத் தயார் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். இதனால் அறிமுக இயக்குநர்கள் பலரும் தினமும் அவரது வீட்டை முற்றுகையிடுகிறார்கள். நேரம் இருக்கும்போது அவர்களிடம் கதை கேட்டு வருகிறார் ஐஸ்வர்யா.