மன அழுத்தத்தால் நாயகி அவதி

மன அழுத்தத்தால் நாயகி அவதி

2 mins read
de341033-5ad1-4f28-a9a3-5f49248c618f
மன அழுத்த நோயின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஷ்ரத்தா கபூர்.  படம்: ஊடகம் -

அண்மைக்காலமாக மன அழுத்த நோயின் பாதிப்பால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார் இளம் நாயகி ஷ்ரத்தா கபூர்.

தற்போது அந்தப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியீடு கண்ட 'சாஹோ' படத்தில் 'பாகுபலி' பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷ்ரத்தா கபூர். அந்தப் படம் விமர்சன ரீதியில் சற்றே பின்னடைவைச் சந்தித்தாலும் வசூலில் அசத்தியது.

இந்நிலையில் ஷ்ரத்தா அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது.

"கடந்த 2013ஆம் ஆண்டிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அதுகுறித்து நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

"எப்படியும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கான முயற்சி நீடித்து வருகிறது," என்று ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் ஒவ்வொரு தனி நபரையும் ஏதேனும் ஒரு வகையில் மன அழுத்தம் துரத்திக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த நோயில் இருந்து விடுபட மருந்துகளை மட்டும் தேடிச் செல்வதில் பலன் இல்லை என்கிறார்.

மாறாக, தினந்தோறும் யோகாசனம், தியானம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும் நல்ல இசையை செவிமடுப்பதும் பலன் தருமாம்.

"நான் பிறருக்கு அறிவுரையாகக் கூறும் அனைத்தையும் நானும் தவறாமல் பின்பற்றுகிறேன். இதன்மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக போராடுகிறேன்.

"முன்பைவிட தற்போது நிலைமை ஓரளவு சரியாகி உள்ளது. மன அழுத்தம் குறைந்திருப்பதாக உணர்கிறேன். எனினும் முழுமையாக அதிலிருந்து விடுபடுவதற்கான எனது போராட்டம் இன்னும் சில காலம் நீடிக்கும்," என்கிறார் ஷ்ரத்தா கபூர்.

ஏற்கெனவே இந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட சில நடிகைகள் தங்களுக்கும் ஒரு கட்டத்தில் கடும் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து விடுபட போராட வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஷ்ரத்தா கபூரும் அத்தகைய பிரச்சினையை எதிர்கொள்வதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் விரைவில் உற்சாகம் பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர். இதற்கிடையே தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஷ்ரத்தா கபூரை முன்னணி நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளதாம்.