மீண்டும் நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார் பிரியா மணி.
ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தவருக்கு, கடந்த நான்கைந்து வருடங்களாக கோடம்பாக்கத்தில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை.
இதையடுத்து மலையாளக் கரையோரம் ஒதுங்கிவிட்டார். அங்கு கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்தவர், தற்போது இணையத் தொடர்களில் நடித்து வருகிறாராம்.
சினிமாவுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறுவதாகச் சொல்கிறார் பிரியாமணி.
"இணையத் தொடர்களும் கைபேசி உள்ளிட்ட விவேக கருவிகளில் பார்க்கக்கூடிய படைப்புகள்தான் அடுத்து இந்த உலகை ஆளும் எனச் சொல்வது தவறு.
"காரணம் இப்போதே அவற்றின் ஆதிக்கம்தான் உச்சத்தில் இருக்கிறது," என்று விளக்கம் தரும் பிரியாமணி, தற்போது நடித்து முடித்துள்ள 'தி பேமிலி மேன்' என்ற இணையத் தொடர் வரும் 20ஆம் தேதி இணையத்தில் வெளியாகிறது.
இதில் தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாயியுடன் இணைந்து நடித்துள்ளாராம். இந்த இணையத் தொடர் வழி பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகச் சொல்கிறார்.
அண்மையில் இந்த இணையத் தொடரின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இணையத்தில் வெளியானது. அதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது பிரியாவை உற்சாகப்படுத்தி உள்ளது.
"கடந்த 2004 ஆண்டு முதல் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்திருக்கிறேன். பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.
"அப்படிப்பட்ட எனக்கு இணையத் தொடரில் நடிப்பது நிச்சயம் வித்தியாசமான அனுபவமாகத்தான் உள்ளது. திரைத் துறையை விட இணையத் துறையில் எல்லாமே வேகமாக நடந்தேறுகின்றன.
"அதேசமயம் தரத்தில் எந்தவிதக் குறையும் இல்லை. இத்தகைய மாற்றங்கள் எனக்கு உற்சாகமளிப்பதாகவே உள்ளன," என்கிறார் பிரியா.
மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக குறிப்பிடுபவர், தற்போது தேடிவரும் வாய்ப்புகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்கிறார்.
அதனால் நல்ல வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்கப் போவதாகச் சொல்கிறார். நல்ல கதை அமைந்தால் கால்ஷீட் தர தயங்க மாட்டாராம்.

