மக்களின் விதவிதமான பொழுது போக்குகளில் திரைப்படம் பார்ப்பதும் முக்கிய ஒன்றாக விளங்கி வருகிறது. அதுவும் புதுப்புது படங்கள் வித்தியாசமான கதை அம்சத்துடன் விரைவில் வெளிவரப் போகிறது என்றால் மக்களின் ஆவல் அந்தப் படங்களைப் பார்ப்பதற்கு அலைமோதும்.
ரசிகர்களின் இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் 'காப்பான்', 'ஆக்சன், 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆகிய மூன்று படங்களும் விரைவில் கடும் போட்டி அளிக்கும் வகையில் வெளிவர உள்ளது.
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அணு இம்மானுவேல் நாயகியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர்.
பார்த்துப் பார்த்து அலுத்துப் போன காதல் காட்சிகளுக்கும் கவர்ச்சி ஆட்டங்களுக்கும் இடையே குடும்ப உறவுகளைப் பேசும் 'நம்ம வீட்டு பிள்ளை' போன்ற படங்களைப் பார்க்கும்போது, உண்மையிலேயே 1970, 80களில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
'சொந்தம் மாதிரி யாராலும் சந்தோசத்தை கொடுக்கவும் முடியாது; சொந்தம் மாதிரி யாராலும் கஷ்டப்படுத்தவும் முடியாது', 'சொந்தத்துக்குள்ளேயே தோத்துப் போக தயாரா இருக்குறவன யாராலும் ஜெயிக்க முடியாது' போன்ற டிரைலரில் வரும் வசனங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டும் வகையில் வெளிவந்துள்ளது.
இந்த மூன்று படங்களின் டிரைலர், டீசர் காணொளிகள்தான் இப்போது யூடியுபில் போட்டி போட்டு வலம் வந்து கொண்டுள்ளன.
சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் இரண்டாவது டிரைலர் 24 லட்சம் பார்வைகளுடன் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
விஷால் நடித்துள்ள 'ஆக்சன்' படத்தின் டீசர் யூடியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து தற்போது 53 லட்சம் பார்வைகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரைலர் 31 லட்சம் பார்வைகளைக் கடந்து தற்போது டிரென்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது. இந்த மூன்று படங்களும் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்ற எதிபார்ப்பை அந்தந்த காணொளி களும் ஏற்படுத்தியுள்ளன.

