இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் 'மாஃபியா'. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த ரஜினி, என்னை அவருடைய இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார். "பிரில்லியண்ட் கண்ணா...செம்மையா இருக்கு," என ரஜினி பாராட்டியதாக கார்த்திக் நரேன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னோட்டக் காட்சி வெளியான 24 மணி நேரத்திற்குள் யுடியூபில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. பொதுவாக முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும். இந்த முன்னோட்டக் காட்சிக்கான வரவேற்பு கார்த்திக் நரேனுக்குக் கிடைத்துள்ள ஒன்று என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர் கார்த்திக் நரேன். அவர் அடுத்து இயக்கிய 'நரகாசுரன்' படம் பல்வேறு காரணங்களால் இன்னும் வெளியாகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
அவரது மூன்றாவது படமாக இயக்கிய 'மாஃபியா' படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டுள்ளனர். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

