இந்துஜா: திறமையை நிரூபிக்க கவர்ச்சி ஆயுதம்

இந்துஜா: திறமையை நிரூபிக்க கவர்ச்சி ஆயுதம்

2 mins read
e6ac99b8-c8af-4419-bdb8-2f27a6da73cc
இந்துஜாவின் கவர்ச்சியால் 'சூப்பர் டூப்பர்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம்: ஊடகம் -

தனது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றிலும் இதுவரை குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்துவந்த நடிகை இந்துஜா நாளை 20ஆம் தேதி வெளியாக உள்ள 'சூப்பர் டூப்பர்' படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

"குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடிக்கவே தான் பொருத்தமானவர் என்ற எண்ணத்தை மாற்றவும் புதுப்பட வாய்ப்புகளைப் பெறவும் எனது வித்தியாசமான நடிப்புத் திறனை வெளிக் காட்டவுமே கவர்ச்சியாக நடிப்பதற்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்தேன்," என்று இந்துஜா கூறியுள்ளார்.

'மேயாத மான்', 'மெர்குரி' '40 வயது மாநிறம்' 'பூமராங், 'பில்லா பாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா, அண்மையில் திரைக்கு வந்த 'மகாமுனி' படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இந்தப் படங்கள் அனைத்திலும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் தோன்றியவர் தற்போது 'சூப்பர் டூப்பர்' படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள குத்துப் பாடல் காட்சிகளில் மிக கவர்ச்சியாக நடனமாடி உள்ள இந்துஜா, முத்தக் காட்சி ஒன்றிலும் துணிச்சலாக நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்துஜாவின் கவர்ச்சியால் 'சூப்பர் டூப்பர்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படம் குறித்து நாயகன் துருவா கூறுகையில், ''சூப்பர் டூப்பர்' படத்தின் கதை காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் என பின்னப்பட்டிருக்கும்.

"நாயகியும் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். அதில் இருந்து எப்படி மீள்கிறோம் என்பதுதான் கதை. திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். படத்தில் துணிச்சலான நாகரிகப் பெண்ணாக இந்துஜா வருகிறார்.

"முந்தைய படங்கள் போல் இல்லாமல் அவரது கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கும். ஷாரா, ஆதித்யா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்," என்று கூறினார்.

இந்துஜாவின் ஆட்டம் பற்றி இயக்குநர் ஏ.கே.கூறுகையில், "அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்திருந்த படங்களில் குடும்பப்பாங்காகத் தோன்றினார்.

"சூப்பர் டூப்பர்' படத்தில் தைரியசாலி பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார்.

"சுயவிருப்பமுள்ள பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். ஜில் ஜில் ராணி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

"சினிமா என்பது கலையம்சம் நிறைந்தது என்பது ஒரு பக்கம். சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம். கவலைகளைப் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம்தான் 'சூப்பர் டூப்பர்'. எனவேதான் ஜில் ஜில் ராணி பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது," என்றார்.