நான் இன்னும் சின்னப் பெண்தான். எனக்கு 22 வயதுதான் ஆகிறது, திரையுலகில் எவ்வளவோ சாதிக்க விரும்புகிறேன். எனது எதிர்கால இலக்கை அடைய இன்னும் தொலைதூரம் செல்லவேண்டிய தேவை உள்ளது என்கிறார் நடிகை சாயிஷா சைகல்.
"எனது கனவுகளை நான் செய்துகொண்ட திருமணத்தின் மூலம் தகர்த்து எறிய முடியாது. நான் என் கணவர் ஆர்யா உட்பட யாருக்கும் அடிமை அல்ல," என்று கூறியுள்ளார் சாயிஷா.
கணவன்-மனைவி இருவருமே எதிர் எதிர் துருவங்களாக நடித்துள்ள 'காப்பான் திரைப்படம் இன்று செப்டம்பர் 20ல் வெளியாகவுள்ளது.
அந்தப் படத்தின் விளம்பர நிகழ்வில் பங்குகொண்ட சாயிஷா கூறுகையில், "சமூகத்தில் பெண்களைப் பற்றிய மனோபாவம் மாறவேண்டும்.
"பாலிவுட்டில் பல நடிகைகள் திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற பின்னரும் கதாநாயகிகளாக கலக்கி வருகின்றனர்," என்று நினைவூட்டிப் பேசினார்.
"திருமணத்திற்குப் பிறகு யார் என்னிடம் மைக்கை நீட்டினாலும் உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதே, இனிமேல் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விகளைக் கேட்டே என்னை வெறுப்பேற்றுகின்றனர்.
"நான் வயதில் மிகவும் சிறியவள். திரையுலகில் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறேன்.
"கல்யாணம் ஆகிவிட்டால், குழந்தைகளைப் பெற்றுவிட்டால் அவர்களால் இனி நடிப்புலகில் சாதிக்க ஒன்றுமில்லை என்றெல்லாம் தப்புக் கணக்கு போடக்கூடாது.
"திருமணம் முடிந்துவிட்டால் அடிமையாக சேவகம் செய்யவேண்டுமா?
"நான் அடிமையா என்ன? ஒரு நடிகை திருமணம் முடிந்தவுடன் தன் கணவருக்காகவும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் மட்டுமே சேவை செய்து, ஒரு அடிமைபோல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவேண்டுமா? எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள், கனவுகள் எதுவும் இருக்கக்கூடாதா?
"ஏன் இந்த சமூகம் இப்படி ஒட்டுமொத்தமாக, ஒரு பெண் தன் திருமணத்திற்கு பிறகு மொத்தமாக மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது," என்று மிகுந்த ஆவேசத்துடன் கேட்டுள்ளார் சாயிஷா.
என் திருமணத்தின்போதே, "நான் திரைப்படங்களில் தொடந்து நடிப்பேன். என் திருமணம் என் கனவிற்கு குறுக்கே ஒருநாளும் தடையாக நிற்காது," என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அடுத்தடுத்து அனைவரும் ஒரே கேள்வியைக் கேட்பது வருத்தம் அளிப்பதாகக் கூறுகிறார் அழகிய இளம் நடிகை சாயிஷா.

