ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை  

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. திடீரென்று இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து இல்லறத்தில் இணைந்து இரு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார். 

“குழந்தை குட்டியாகிவிட்டது. இனிமேல் நடிக்க வரமாட்டார்,” என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்து தனது ரசிகர்களை மனம் குளிரச் செய்துள்ளார் ஜெனிலியா. 

இதுபற்றி ஜெனிலியா கூறுகையில், “வாழ்க்கையில் வித்தியாசமான பல்வேறு தருணங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். நடிப்புதான் உலகம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பத் தலைவியாக, பரபரப்பான தாயாக பல அனுபவங்களைப் பெற்றுவிட் டேன். தற்போது மீண்டும் நடிக்க வருவதுபற்றி திட்டமிட்டு வருகிறேன். அதற்கான கதைத் தேர்வு நடந்து வருகிறது. 

“வாழ்க்கையில் தாய் என்ற அந்தஸ்தை அடைந்தது மிக அருமையான தருணம். எனது குழந்தைகள், கணவருடன் எனது வாழ்க்கையை சரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வருடத்துக்கு வருடம் வயது ஏறிக்கொண்டே போவது பற்றி எல்லாம் கவலையில்லையா என்கிறார்கள். வயதென்ன வயது? வயது என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அதுவொரு சலுகை. அவ்வளவுதான்,” என்கிறார் ஜெனிலியா.