மணல் கொள்ளையைச் சாடும் ‘வீராபுரம்’

‘அங்காடித்தெரு’ மகேஷ் நடித்துள்ள படம் ‘வீராபுரம் 220’. மேக்னா நாயகியாக நடித்துள்ளார்.

இது மண் சார்ந்த பிரச்சினை, மக்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படைப்பாம். செந்தில்குமார் இயக்கியுள்ளார். ரித்தேஷ்-ஸ்ரீதர் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். 

படப்பிடிப்பு துவங்கியதுமே சில பிரச்சினைகளும் தலைதூக்கினவாம். அதனால் பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், படத்தயாரிப்பை தன் கையில் எடுத்துக்கொண்டு, திட்டமிட்டபடி அனைத்து வேலை  களையும் முடித்து, வெளியீடு செய்ய காத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுந்தர் ராஜ்.

அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்புத் தரப்பை வெகுவாகப் பாராட்டினார்.

“தயாரிப்பாளர் சுந்தர் ராஜால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார். “சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் ‘சென்டிமென்ட்’ பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றி.

“இப்படம் மணல் கொள்ளையை மையமாகக் கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். 

“ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குநர் செந்தில்குமார் சொன்னாரா? இல்லை, இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்தப் படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்துவிட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்,” என்று பேசி அரங்கை சிரிப்பில் அதிர வைத்தார் பாக்யராஜ்.