உலகக் கோப்பையைத் திருடுபவர்கள் கதை

அண்மைக்காலமாக கோடம்பாக்கத்தில் திரைப்படங்களுக்கு வைக்கப்படும் தலைப்புகள் நிறைய யோசிக்க வைக்கின்றன. அந்த வகையில் ‘உலகக் கோப்பையை திருடும் கூட்டம்’ என்ற தலைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு படத்துக்கு தலைப்பு ரொம்ப முக்கியம் என்று குறிப்பிடும் இயக்குநர் சுதர், இந்தப் படத்துக்காக 120 தலைப்புகள் வரை யோசித்தாராம். தயாரிப்பாளரிடம் தினமும் ஒரு தலைப்பைச் சொல்வாராம்.

“ஒவ்வொரு தலைப்பையும் வடிவமைத்தும் காட்டுவோம். ஆனால் எதுவுமே அனைவருக்கும் பிடித்தமானதாக அமையவில்லை. நல்ல வேளை, படப்பிடிப்பு துவங்க இரண்டு தினங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த தலைப்பு அனைவருக்கும் மனநிறைவைத் தந்தது. புகழ்பெற்ற பாடல் வரி என்பதால் தலைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

“கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா டோனி தலைமையில் உலகக் கிண்ணத்தை வென்றது. அதே காலகட்டத்தில் அந்தக் கிண்ணத்தை ஐந்து நண்பர்கள் திட்டமிட்டுத் திருடினால் எப்படி இருக்கும்?

இதுதான் படத்தின் கதையாம். அதற்காக சீரியசான கதை என நினைத்துவிட வேண்டாம். செம ஜாலியாக இருக்கும் எனப் படக்குழுவினர் உத்தரவாதம் அளிக்கின்றனர்.

“மற்றபடி இது திருட்டை மையப்படுத்தும் கதை கிடையாது. படம் துவங்கும்போதே திருடுவது எப்படி என்று நாங்கள் சொல்லிக் கொடுக்கமாட்டோம். 

“நகைச்சுவை, திருட்டுக் கும்பல் சந்திக்கும் பிரச்சினைகள் என்று பல தளங்களில் கதை பயணிக்கும்,” என்கிறார் இயக்குநர் சுதர்.

‘கயல்’ சந்திரன் நாயகனாக நடிக்க, சாட்னா டை்டஸ் அவருக்கு ஜோடியாகி உள்ளார். பார்த்திபன் சார் முக்கிய வேடத்தில் அசத்துவார்.

“கயல்’ சந்திரன் வளர்ந்து வரும் நாயகன். அவரது அண்ணனிடம்தான் கதையை முதலில் விவரித்தேன். பிறகு சந்திரனுக்கும் கதை பிடித்துப் போனது. இதில் வித்தியாசமான சந்திரனைப் பார்ப்பீர்கள். 

“சில காட்சிகளில் ‘டூப்’ போடாமல் நடித்த அவரது அர்ப்பணிப்பு என்னை நெகிழ வைத்தது. இப்படிப்பட்ட அர்ப்பணியும் உழைப்பும்தான் ஒரு கதாநாயகனுக்கு முக்கியம்.

“பாடல்களுக்காகவும் கவர்ச்சிக்காகவும் மட்டும் நாயகியை ஒப்பந்தம் செய்யவில்லை. சாட்னாவுக்கும் இது தெரியும். கதைப்படி அவர் பெயர் அஞ்சலி. தமிழ் அவருக்கு அந்நிய மொழியாக இருந்தாலும் மொழிப் பிரச்சினையை பிரமாதமாக சமாளித்து நடித்தார். 

“அவரது முக பாவனைகள் அனைவரையும் கவரும். உலகக் கிண்ணத்தைத் திருடும் திட்டத்தில் அவருக்கும் முக்கிய பங்கு இருக்கும்.

“பார்த்திபன் சார் பற்றி எல்லோருக்கும் தெரியும். கதை உருப்படியாக இருக்கவேண்டும் என நினைப்பார். நான் சொன்ன கதையைக் கேட்டதும் சார் மறுப்பு சொல்லாமல் நடிக்க சம்மதித்தார். அதுவே எங்களுக்குக் கிடைத்த பாதி வெற்றி என்பேன்.

“நான்கு சண்டைக் காட்சிகள் உள்ளன. அஷ்வத் இசையில் பாடல்களும் அருமையாக அமைந்துள்ளன. மொத்தத்தில் இது ரொம்ப ஜாலியான படம் என்பதில் சந்தேகமே வேண்டாம்,” என்கிறார் சுதர்.