சூர்யா ரசிகர்களை பாராட்டும் மக்கள்

சூர்யா ரசிகர்களை பாராட்டும் மக்கள்

2 mins read
0dcf5c00-8d6b-4aaa-b4b6-036c5d02da3b
-

காஷ்மீர் பிரச்சினை, டெல்டா இயற்கைவள சுரண்டல், கார்ப்பரேட் அரசியல், பாகிஸ்தான் தீவிரவாதம், பயோ வார், இயற்கை விவசாயம், அமெரிக்கச் சதி என அத்தனையையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறது 'காப்பான்' படக்குழு.

இப்படத்தில் சூர்யா முறைப்பும் விறைப்புமாக ரகசிய உளவு அதிகாரியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மோகன்லாலின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பைப் பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் படம் அவரைக் காப்பாற்றியதா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்குப் பாராட்டுகள் குவியும் முன் பேனர் விஷயத்தில் அவரது ரசிகர்களைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் சாலை நடுவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கிய இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அவருடைய மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

அதே போல் நடிகர்களில் விஜய், சூர்யா, கமல்ஹாசன் ஆகியோரும் வெளிப்படையாக அறிவித்தார்கள்.

நடிகர் சூர்யா 'காப்பான்' செய்தியாளர் சந்திப்பில் பேனர்கள் வைக்க வேண்டாம் அதற்குப் பதிலாக நலத்திட்ட உதவிகள் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சுபஸ்ரீ உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு வெளிவரும் முன்னணி நடிகரின் படமாக நேற்று முன்தினம் சூர்யா நடித்த 'காப்பான்' படம் வெளிவந்தது.

அந்தப் படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் எந்த ஒரு கட்-அவுட், பேனரையும் பார்க்க முடியவில்லை. அனுமதிக்கப்பட்ட விதமாக ஒரே ஒரு பேனர் மட்டுமே திரையரங்குகளின் உட்புறங்களில் வைக்கப்பட்டிருந்தன.

படம் வெளியாகும் முதல் நாளில் பல கட்-அவுட்டுகள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என எந்த ஒரு கொண்டாட்டமும் நிகழவில்லை.

மக்களின் விருப்பத்திற்கிணங்க சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் இல்லாத படவெளியீட்டைக் கடைப்பிடித்ததற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.