தனக்கும் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் நாயகி ராஷ்மிகா மந்தனா.
தாம் யாருடனும் காதல் வயப்படவில்லை என்றும் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. தங்களுக்குள் நட்பு மட்டுமே இருப்பதாக இருவரும் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டனர்.
அதன்பிறகும் சமூக வலைத்தளங்களில் சிலர் எப்போது விஜய்யுடன் திருமணம்? என்று கேள்வி எழுப்புகிறார்களாம். இதையடுத்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராஷ்மிகா.
"நாங்கள் இருவரும் செய்யும் தொழிலில் இணைந்து செயல்படுகிறோம். இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ளோம். எங்களுக்குள் காதல் இல்லை. அடுத்த இரு ஆண்டுகளுக்கு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறோம். இதன் பிறகாவது காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்," என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

