கதாநாயகனாக நடிக்கிறார் சூரி

கதாநாயகனாக நடிக்கிறார் சூரி

2 mins read
bebc4833-c49e-4039-b46e-45de2c66e7ae
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே நாயகனாக நடிக்கக் கேட்டு பலரும் சூரியை அணுகினராம். ஆனால் எந்த வாய்ப்பையும் ஏற்காமல் தவிர்த்துள்ளார். ஆனால் இப்போது இயக்குநர் வெற்றிமாறன் கேட்டதும் சரி என்று கூறியுள்ளார். படம்: ஊடகம் -

ஏற்கெனவே எதிர்பார்த்த தகவல்தான் எனினும் சற்று தாமதமாகவே வந்திருக்கிறது எனலாம். வேறொன்றுமில்லை... நடிகர் சூரியும் கதாநாயகனாகி விட்டார். அதிலும் முதல் படமே வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிறது என்பதால் சந்தேகமே இல்லாமல் அவர் அதிர்ஷ்டசாலிதான்.

மிக விரைவில் தனது நூறாவது படத்தில் நடிக்க உள்ளார் சூரி. தற்போது அவர் நடித்துள்ள 'நம்ம வீட்டு பிள்ளை', 'சங்கத் தமிழன்' ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

இந்நிலையில் கவுண்டமணி-செந்தில், வடிவேலு-சந்தானம் போல் தனது இயல்பான நகைச்சுவையை வெளிப்படுத்த சரியான தளம் அமையவில்லை என்கிறார் சூரி.

"முன்பெல்லாம் நகைச்சுவைக்கு என ஒரு படத்தில் கணிசமான நேரம் ஒதுக்கப்படும். படத்தின் கதைக்கும் நகைச்சுவைக்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட நன்கு ரசிக்க முடியும்.

"அதனால் எனக்கு முன் சாதித்தவர்களுக்கு பல வகையிலும் தங்கள் நகைச்சுவையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை," என்கிறார் சூரி.

முன்பெல்லாம் ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது நகைச்சுவை நடிகர்களைப் பாதித்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், சில சமயங்களில் நகைச்சுவைதான் சில படங்களை வசூல் ரீதியில் காப்பாற்றி உள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

தற்போது கதாநாயகர்களுடன் இணைந்து பயணிக்கும் வகையில்தான் நகைச்சுவை நடிகர்களுக்கான கதாபாத்திரம் அமைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருப்பதாக அலுத்துக் கொள்கிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே நாயகனாக நடிக்கக் கேட்டு பலரும் சூரியை அணுகினராம். ஆனால் எந்த வாய்ப்பையும் ஏற்காமல் தவிர்த்துள்ளார்.

"எனினும் வெற்றிமாறன் அண்ணனே நாயகனாக நடிக்க அழைத்தபோது சத்தியமாக அது உண்மை என்று நம்பவில்லை. அவரும் என்னை உரிய மரியாதையுடன் அழைத்து ஒரு வரியில் கதை சொன்னார். உடனே ஒப்புக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தில் அவர்தான் கதாநாயகன்.

"இந்த வாய்ப்பு குறித்து சிவகார்த்திகேயனிடம் விவரம் தெரிவித்தபோது ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். அவர் என் மீது அக்கறை கொண்டவர். ஜனவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம்," என்று சூரி மேலும் கூறியுள்ளார்.

ஒரு படத்தின் நகைச்சுவையானது வெற்றி அடைய இயக்குநர்தான் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ள சூரி, இயக்குநரின் அனுமதியோடு நகைச்சுவைப் பகுதியை மெருகேற்றும் பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

"எனவே மெருகேற்றுவது என்னைப் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வேலை. இயக்குநரை மீறி நாம் காட்சியை உருவாக்க முடியாது. ஆனால் கொடுக்கப்பட்ட காட்சிக்குள் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.

"ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது," என்கிறார் சூரி.