ஆஸ்கர் விருதுக்கு இம்முறை இந்தியா சார்பாக 'கல்லி பாய்' என்ற இந்திப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் மிதக்கிறார் அப்படத்தின் நாயகி அலியா பட்.
ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாயா அக்தர் இயக்கி உள்ளார். இந்தி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள இப்படம் வசூலில் அசத்தி வருகிறது.
இதுவரை 238 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாம். இதையடுத்து ரன்வீரும் அலியாபட்டும் அடுத்த படத்திலும் ஜோடி சேர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தந்தை, சித்தியால் உதாசீனப்படுத்தப்படும் ரன்வீர் சிங் பாசத்துக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோழியாக நடித்து அசத்தியுள்ளார் அலியா பட்.
"ஆதரவற்ற நிலையில் வீதிகளில் அலைந்து திரியும் ஓர் இளைஞன் எப்படி பேரும் புகழும் அடைகிறான் என்பது தான் 'கல்லி பாய்' படத்தின் கதை.
"விமர்சனம், வசூல் ரீதியில் சாதித்துள்ள இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்பது மிகப் பொருத்தமானது," என்கிறார் அலியா பட்.
எனினும் 'கல்லி பாய்' சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் உலக சினிமாக்களுடன் போட்டி போட இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது தமக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக சொல்கிறார் அலியா.
"நான் நடித்த படம் ஒன்று ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. நடந்ததை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. அதனால் அளவற்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். எனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை," என்கிறார் அலியா.
'கல்லி பாய்' படக் குழுவினருக்கு இது மகிழ்ச்சியான, பெருமைக்குரிய தருணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த படக்குழுவும் நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றியதாகப் பாராட்டுகிறார்.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரையில் 5 திரைப்படங்கள் இடம்பெறும். அவற்றுள் 'கல்லி பாய்' இடம்பெற்றிருக்கும் என்பதுடன், ஆஸ்கர் விருதையும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று சொல்லும்போதே அலியாவின் கண்களில் நம்பிக்கை மிளிர்கிறது.
"அதற்காக ஆஸ்கர் விருது மட்டுமே முதன்மையான அங்கீகாரம் என்று சொல்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் ஏற்கெனவே இந்தப் படத்தை மனதார ஏற்றுக் கொண்டு வெற்றிப் படமாக மாற்றிவிட்டனர்.
"எனவே அதுவே மன நிறைவைத் தந்துள்ளது. ஆஸ்கர் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி, அவ்வளவுதான்," என்கிறார் இளம் நாயகி அலியா பட்.

