'பிகில்' பட விழாவில் தாம் பேசியதில் முக்கியமான ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார் நடிகர் டேனியல் பாலாஜி.
எனினும் தான் பேசியதை மிகச் சுருக்கமாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இணையத் தொடர் ஒன்றில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதுவரை வில்லனாக மட்டுமே மிரட்டி வந்த நிலையில் முதல்முறையாக 'காட் மேன்' என்ற தலைப்பில் உருவாகும் இணையத் தொடரில் ஆன்மீக குருவாக நடிக்க உள்ளாராம். இந்த இணையத் தொடரை ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாஸ்' படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்க உள்ளார்.
இதற்கிடையே 'பிகில்' படத்தின் சுவரொட்டிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'பிகில்' படத்தின் முதல் சுவரொட்டியில் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். அதில் மீன், கறிக்கோழி, ஆட்டிறைச்சியை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கட்டை, கத்தி மீது அவர் கால் வைத்திருப்பது தெரிகிறது.
இது தங்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவர் குறிப்பிட்ட அந்தச் சுவரொட்டியுடன் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அந்தச் சுவரொட்டியை ஆவேசமாகக் கிழித்தெறிந்த அவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
சுவரொட்டியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சி இறைச்சி வியாபாரிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தக் காட்சியை நீக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

