விஜய்க்கு வில்லனான சேதுபதிக்கு சம்பளம் 10 கோடி ரூபாய்

விஜய்க்கு வில்லனான சேதுபதிக்கு சம்பளம் 10 கோடி ரூபாய்

2 mins read
8b3c6e02-e6f8-4fb2-b54f-66ec94060380
நடிகர் விஜய் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

நடிகர் விஜய் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் காற்பந்து விளையாட்டை மையமாக வைத்து அட்லி இயக்கி, விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள 'பிகில்' படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.

இப்படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ஏற்கெனவே 'மாநகரம்' படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இது விஜய்க்கு 64வது படம் ஆகும். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ராஷிகன்னா, ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.

அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துக்ளக் தர்பார்' படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளாராம் விஜய் சேதுபதி. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறதாம்.

அதாவது, தளபதி 64 படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் 'துக்ளக் தர்பார்' படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்.

ஆகையால் தான், தளபதி 64 படத்திற்காக விஜய் சேதுபதி தேதி ஒதுக்கியுள்ளாராம்.

அக்டோபர் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் 'பேட்ட' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேது பதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்த வில்லை.