'பெற்றோர் சொத்தை எதிர்பார்க்காதீர்கள்'

2 mins read
707c6584-306e-437e-a4f3-65806bd6c839
-

பொழுதுக்கும் தாய்-தந்தை சேர்த்து வைத்துள்ள சொத்துகளையே நம்பிக்கொண்டு காலம் தள்ளக்கூடாது. நம்மால் முடிந்தவரை நம் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஷ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

"இதுவரை அப்பா சொத்தில் எனக்கென்று ஏதும் பங்குள்ளதா என கேட்டது இல்லை. அதை நினைப்பதும் இல்லை. "எனக்குத் தேவையான சொத்துகளை நானே சம்பாதித்துக்கொள்வேன். நாளை எனது குழந்தைகளுக்கும் இதையே கற்றுக்கொடுப்பேன்.

"பெற்றோர் கொடுக்க நினைப்பதைக் கொடுப்பார்கள். ஆனால் நாமும் சம்பாதிக்க முயற்சி செய்யவேண்டும்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.

'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷ்ருதி ஹாசன், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்போது 'டிரட்ஸ்டோன்' என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் நிரா படேல் என்னும் கதாபாத்திரத்தில் ஷ்ருதி நடிக்கிறார்.

அத்துடன் இத்தொடரில் சண்டைக் காட்சிகள் அதிகம் உள்ளது என்பதால் அதற்கான சிறப்புப் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஷ்ருதி திரைச்செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "வாழ்க்கையைச் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். "அதிக செலவு செய்யும் பழக்கம் எனக்கு இருந்தது. அதன்பிறகு பணத் தேவைக்காக வேலை செய்தேன். ஆனாலும் திருப்தி இல்லை.

"மகிழ்ச்சியாக வாழ வங்கியில் பணமிருந்தால் மட்டும் போதாது என புரிந்தது. மற்ற நாயகி களுடன் ஒப்பிட்டால் எனது சம்பாத்தியம் குறைவு தான். நான் ஒரு பெரிய நட்சத்திரமும் அல்ல.

"எனது அப்பா சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட்டார். சாதாரணமாக சம்பாதித்த பணத்தை வைத்து சொத்து வாங்கு வார்கள். ஆனால் எனது தந்தை ராஜ்கமல் பட நிறுவனத்தைத் தொடங்கி படங்கள் தயாரித்தார். அவருக்கு சினிமாதான் உயிர்மூச்சு.

"உங்களுக்கு ஏதாவது மிச்சம் வைத்துள்ளாரா? சொத்தில் பங்கு கேட்டதுண்டா?" என்று கேட்கின்றனர். "என் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானது. அப்பா சென்னையில் ஒரு பள்ளியில் படிக்கவைத்தார். அதன் பிறகு அமெரிக்காவில் நல்ல கல்லூரியில் சேர்த்தார்.

"நல்ல உணவு, உடைகள், விலைமதிப்பில்லாத கார், வீடு என எல்லாவற்றிலும் சிறப்பானதைக் கொடுத்தார். "21 வயதிலேயே நான் கதாநாயகியாக நடித்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன்பிறகு அப்பாவிடம் இருந்து பணம் வாங்குவதை நிறுத்திவிட்டேன். இதுவரை அப்பா சொத்தில் பங்கு கேட்டது இல்லை," என்கிறார் ஷ்ருதி.