பார்வதி: சவால்களைச் சந்திக்கப் பிடிக்கும்

2 mins read
b019e081-1019-4080-9da0-fae0c5a333be
சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் சவாலான வேடங்களில் நடிக்கவும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார் பார்வதி நாயர்.   -

'என்னை அறிந்தால்', 'நிமிர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் சவாலான வேடங்களில் நடிக்கவும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார்.

"திரைத்துறை எனக்கு மிகவும் பிடித்தமான துறை. இத்துறையைப் பிடித்துள்ளதால்தான் நான் நடிக்க வந்தேன்.

"நான் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் முந்தைய படங்களைவிட வித்தியாசமாக இருக்கவேண்டும். என் பாத்திரம் முக்கியம். அதற்கு ஏற்றபடி கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்.

"வரலாற்று பின்னணியில் தயாராகும் படங்கள் அதிகம் வருவதை வரவேற்கிேறன். வரலாற்று படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது நமக்கு ஒரு சவாலாகவும் அமையும். இந்த சவாலை எதிர்கொள்வது எனக்கு பிடித்த ஒன்று.

"இவர்தான் சிறந்த நடிகை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஆனால், திறமையான நடிகைகள் அதிகம் உள்ளனர். பழைய நடிகைகளில் குறிப்பிட வேண்டுமானால், ஷோபனாவைப் பிடிக்கும். அவர் அளவுக்கு மற்ற யாரையும் பிடிக்கவில்லை.

"எனக்குப் பிடித்த இயக்குநர் மணிரத்னம். நடிகர் என்றால் நிறைய பேரை சொல்ல வேண்டும். என் சின்ன வயதில், மோகன் லாலை ரொம்ப பிடிக்கும். அவரைப்போல் யாராலும் நடிக்கமுடியாது.

"பொறியியல் துறையில் நான் படித்துக்கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தானாக என்னைத் தேடி வந்தது. நான் இந்த வாய்ப்பைத் தேடிப் போகவில்லை.

"சிறு வயதில் இருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். சோனி ஸ்போர்ட்ஸில் டி- 10 கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபி யில் நடக்கிறது.

"அபுதாபி நான் வளர்ந்த இடம். அபுதாபிக்கும் எனக்கும் அதிக தொடர்புள்ளது.

"டி-10 விளையாட்டு யாருக்கும் போர் அடிக்காத, விறுவிறுப்பான விளையாட்டு என்பதால் நான் இதில் இணைந்துள்ளேன். 'கேரளா நைட்' அணிக்கு விளம்பரத் தூதுவராகவும் இணைந்துள்ளேன்.

"எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் என்று ஒருவரை மட்டும் சொல்வது சிரமம். இந்த போட்டியைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனைப் பிடிக்கும்.

"அடுத்து தமிழில் நான் நடிக்கும் புதிய படங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாக உள்ளது. பொறுமையாகக் காத்திருங்கள்," என்கிறார் பார்வதி நாயர்.