'பிக்பாஸ்' நிகிழ்ச்சியில் பங்கேற்றதற்காக இயக்குநர் சேரனை சிலர் விமர்சித்து வருகிறார்கள் எனில் மற்றொரு பக்கம் இளையர்களுடன் அவர் போட்டியிட்டதை ஒரு தரப்பு பாராட்டவும் செய்கிறது.
இந்நிலையில் மீண்டும் படங்களை இயக்கத் தயாராகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அநேகமாக விஜய் சேதுபதியை வைத்து அவர் மிக விரைவில் ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. தனக்கு விஜய் சேதுபதி கால்ஷீட் அளித்திருப்பதாக சேரனும் உறுதி செய்துள்ளார்.
"விஜய் சேதுபதியை வைத்து உருவாக்கும் படத்தின் படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதமே துவங்க இருந்தோம். ஆனால் அந்தச் சமயத்தில்தான் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதுகுறித்து அவரிடம் விவரம் தெரிவித்தேன்.
"சேதுபதியைப் பொறுத்த வரை தன்னை இயக்கப்போகும் இயக்குநரும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் நபராக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதனால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றால் என்னைப் பற்றி பொதுமக்கள் அதிகம் பேசுவார்கள் என்றும் இது படத்துக்கான விளம்பரமாக அமையும் என்றும் சேதுபதி கூறினார்," என்கிறார் சேரன்.
'பிக்பாஸ்' மூலம் கிடைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சேதுபதி தெரிவித்தாராம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது சேரனுக்கு என தனி உலகத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்தாராம்.
தற்போது சேதுபதி சொன்னதுதான் நடந்துள்ளது என்கிறார் சேரன்.
"கடந்த ஆறேழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக என்னால் படங்களை இயக்க முடியவில்லை. அவ்வப்போது படம் இயக்கினாலும் பெரிய அளவில் இளையர்களைச் சென்றடைய முடியவில்லை.
"இன்றைய இளையர்களுக்கு இந்தக் காலப் படங்கள்தான் கண்ணுக்குத் தெரிகின்றனவே தவிர, 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட படைப்புகள் குறித்து ஏதும் தெரியவில்லை. எனவே நான் சற்றே தயாராக வேண்டியுள்ளது," என்கிறார் சேரன்.
விஜய் சேதுபதியுடனான படம் தொடர்பான பணிகள் விரைவில் துவங்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கமல்ஹாசனை வைத்து 'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான முழு வடிவம் பெற்ற கதை தம்மிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

