பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள புகழ்மணி 'காவி ஆவி நடுவுல தேவி' படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் 11 விதமான தோற்றங்களில் வரும் யோகி பாபு பிரிந்துள்ள காதலர்களைச் சேர்த்துவைக்கத் துடிப்பவராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். இவரது ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமைய்யா, இயக்குநர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறுகையில், "இது முழு நகைச்சுவை படம். காதலர்களைச் சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும் அவருக்கு எதிராக காதலர்களைப் பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திர னும் மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது," என்றார்.

