துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை வர்ணிக்கும் ‘காவியன்’

உலகிலேயே துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியானவர்கள் இந்தியர்கள்தான். அந்த அதிர்ச்சி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் சாரதி. ‘காவியன்’ படம் பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் படத்தின் பெயரே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘காவியன்’ என்ற கவித்துவமான பெயருடன் கனமான கதையோடு களம் இறங்கி உள்ளோம். அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘காவியன்’ படம் வளர்ந்து இருக்கிறது. இதில் கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’யில் அறிமுகமான ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதேவிகுமார் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் உடன் நடிக்கிறார்கள்,’’ என்றார்.