சுடச் சுடச் செய்திகள்

ஹன்சிகா நடிக்கும் படத்தில் கிரிக்கெட் வீரர் அறிமுகம்

‘100’ படத்தைத் தொடர்ந்து, ‘மஹா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் தெலுங்கில் ‘தெனாலி ராமகிருஷ்ணா BABL’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. 

முழுக்க திகில் நகைச்சுவை வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதனை ஹரி - ஹரிஷ் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்தப் படத்துக்கு முன்பாக ‘அம்புலி’, ‘ஜம்புலிங்கம்’ உள்ளிட்ட படங்களை ஹரி - ஹரிஷ் கூட்டணி இயக்கியுள்ளது.

இவர்கள் இயக்கவுள்ள அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

முன்னதாக இந்தியில் ‘அக்‌ஷர் 2’, மலையாளத்தில் ‘டீம் 5’ உள்ளிட்ட படங்களில் ஸ்ரீசாந்த் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய படத்தை ‘தர்மபிரபு’ படத்தின் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.

டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது ஹன்சிகா, ஸ்ரீசாந்த் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.