சுடச் சுடச் செய்திகள்

ரஜினிக்காக மீண்டும் சூர்யா விட்டுக்கொடுத்ததாக பேச்சு

சிவா அடுத்து சூர்யாவை இயக்கபோவதாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ரஜினிக்காக சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா என்று திரையுலகத்தில் பேசப்படுகிறது.

சூர்யா நடிக்க ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. மேலும் இப்படத்தில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகிறார் என்றும் அப்போது பேசப்பட்டது.

இதற்கிடையே, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தைப்  பார்த்த ரஜினி, அப்படத்தை இயக்கிய சிவாவை அழைத்துப் பாராட்டினார். இதனால் ரஜினி அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது.

மேலும் இந்தக் கூட்டணியின் படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸும் பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது.

எனவே சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவது சூர்யாவா, ரஜினியா என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில், ‘தலைவர்168’ என்ற தற்காலிகப் பெயரில் ரஜினி - சிவா - சன் பிக்சர்ஸ் கூட்டணியில்  உருவாகவுள்ள திரைப்படம் பற்றி அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

எனவே, மீண்டும் ரஜினிக்காக சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா என்ற பேச்சு நிலவுகிறது.

இதற்கு முன்பும் ‘மெட்ராஸ்’ படம் வெளியான பின், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த சமயத்தில்தான் ‘கபாலி’ படத்தை இயக்க பா.ரஞ்சித் சென்றார்.

ஆனால், இதுவரையிலும் சூர்யா, பா.ரஞ்சித் படம் ஆரம்பமாகாமலேயே உள்ளது.

இதற்கிடையே ரஜினியை இயக்க கிடைத்த வாய்ப்பு குறித்துப் பேசிய இயக்குநர் சிவா, “மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். 

“ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. வரும் வாரத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது அறிவிக்கப்படும். 

“அதற்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில்தான் படப்பிடிப்பு நடக்கும். நல்ல ஜனரஞ்சகமான, மகிழ்ச்சியான குடும்பப் படமாக இது இருக்கும். 

“ரஜினி சாரை சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். நான் அவரது தீவிரமான ரசிகன். அவரை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

“கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

“எனக்கு குடும்ப உறவுகளும் அதைச் சுற்றியிருக்கக்கூடிய மகிழ்ச்சியும் ரொம்பப் பிடிக்கும். ஆகையால், கண்டிப்பாக இது குடும்பப் படம்தான்.

“ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படம் என்று சொல்லலாம். ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்று சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon