ஒரு லட்சம் விதைப்பந்துகளுடன் வெளியாகிறது 'பிகில்'

ஒரு லட்சம் விதைப்பந்துகளுடன் வெளியாகிறது 'பிகில்'

1 mins read
80415471-d7c4-439c-ada0-ef75880445e8
பதாகைகளுக்குப் பதிலாக ஆயிரம் விதைப் பந்துகளையும் 100 காற்பந்துகளும் சிறுவர்களுக்குப் பரிசாக வழங்கினர் விஜய் ரசிகர்கள். படம்: ஊடகம் -

நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்திற்கு 'பேனர்' வைப்பதற்குப் பதிலாக விதைப் பந்துகள் வீச உள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

'பேனர்' விழுந்து சென்னை இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் பேனருக்கு எதிராக மக்களின் கோபம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் விதைப் பந்துகள் தூவப் போவதாக கூறியுள்ளனர். கோவை காந்திபுரத்தில் 'பிகில்' படத்தின் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட விஜய் ரசிகர்கள் சார்பில் ஆயிரம் விதைப்பந்துகளும் 100 காற்பந்துகளும் குழந்தைகளிடம் வழங்கப்பட்டன.

'பிகில்' படம் வெளியாகும்போது 1 லட்சம் விதைப்பந்துகள் தயார் செய்து வனப்பகுதிகள் உட்பட பல இடங்களிலும் வீசப்போவதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. பேனர் வைப்பதற்குப் பதிலாக விதைப் பந்துகள் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும் இது மழைக்காலம் என்பதால் தூவும் விதைகள் முளைத்து மரமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப்படத்தின் கதை என்னுடையது என இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லி, படத்தயாரிப்பு நிறுவனமான 'ஏஜிஎஸ்.' ஆகியோர் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு இன்று மாலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.