எஸ்.ஜே.சூர்யாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகிஷா படேல் தற்போது 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
'பாண்டிமுனி', 'ஆயிரம் ஜென்மங்கள்' என்று தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து வருவதால் நிகிஷா முகத்தில் உற்சாகம் படர்ந்திருக்கிறது.
இவரது தாய்மொழி குஜராத்தி. தாயார் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றால், தந்தை கென்யாவில் பிறந்து வளர்ந்தவராம். பள்ளிப் படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டவர், மனோதத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
சிறு வயது முதல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான் நிகிஷாவின் ஆசையாம். லண்டனில் இருந்தபோது 'மிஸ் வேல்ஸ்', 'மிஸ் இந்தியா யுகே' என்று பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்கள் வாங்கியுள்ளாராம்.
"பிபிசி ஊடகத்துக்காக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் உண்டு.
"அப்போது தான் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து, எஸ்.ஜே.சூர்யா சார் இயக்கிய 'கோமாராம் புலி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"ஆனால் அந்தப் படம் வெளியாகும் முன்பே தென்னிந்திய மொழிகளில் மேலும் பல வாய்ப்புகள் தேடி வந்தன.
"இடையில் நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்ததால் மக்கள் மத்தியில் ஓரளவு அறிமுகமாகி இருந்தேன்," என்கிறார் நிகிஷா.
தாம் இந்தி நடிகை மாதுரி தீக்ஷித்தின் தீவிர ரசிகை என்று சொல்பவர், மாதுரிதான் தனக்கு முன்மாதிரி என்கிறார். மாதுரியை திரையில் பார்க்கும்போதெல்லாம் தானும் அதேபோல் பெரிய நடிகையாக உருவாக வேண்டும் என்று நினைத்துக் கொள்வாராம்.
"தொடக்கத்தில் இந்திப் படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் இந்தியாவுக்கு வந்தபிறகு தென்னிந்திய சினிமா எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பது தெரியவந்தது.
"மும்பையில் தங்கியிருந்தபோது பல்வேறு வாய்ப்புகள் தேடிவந்தன. எனினும் எஸ்.ஜே.சூர்யா சார் மீது மிகுந்த நம்பிக்கை இருந்ததால் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்று சொல்லும் நிகிஷா, நல்ல கதை, கதாபாத்திரம், நல்ல நிறுவனம் என்பதை உறுதி செய்தபிறகே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வாராம்.
கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்றாலும் எதுவும் அளவோடு இருக்கவேண்டும் என்கிறார்.
நிகிஷாவைப் பொறுத்தவரை சேலை தான் மிகக் கவர்ச்சியான உடையாம். அந்தக் கவர்ச்சியை வேறு எந்த உடையிலும் எதிர்பார்க்க முடியாது என்கிறார்.
"இங்கு கவர்ச்சி குறித்து சரியான புரிதல் இல்லை என்றே நினைக்கிறேன். அதே சமயம் ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதையும் உணர்ந்துள்ளேன்.
"தற்போது 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ரசிகர்கள் விரும்பும் வகையில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். இந்தப் படம் வெளியானபிறகு மேலும் சில பட வாய்ப்புகள் தேடிவரும் என நம்புகிறேன்.
"நடிக்க வந்த புதிதில் சில கதாபாத்திரங்களுக்கு நான் சரியாக பொருந்துவேனா என்ற சந்தேகத்தில் நடிப்புத் தேர்வு வைத்தனர். தற்போது அந்தக் கட்டத்தை எல்லாம் கடந்துவிட்டேன்.
"இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் பொழுதுபோக்கு படங்களிலும் என்னை அதிகம் பார்க்கமுடியும். இதன்மூலம் ரசிகர்களைத் திருப்திபடுத்துவேன்," என்கிறார் நிகிஷா படேல்.

