நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களுள் வித்தியாசமான முறையில் கார்த்திக் சுப்பராஜ் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள படத்தின் பெயரை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படத்தின் பெயரை அவரது பிறந்தநாள் பரிசாக நேற்று காலை 11:11 மணிக்கு கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி 'பென்குவின்' என்ற தலைப்புடன் அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு சுவரொட்டியும் இணையத்தில் பரவ, இதுகுறித்து ஏன் இப்படி? உண்மையா? நடிப்பா? புதிய படத்தின் திரைக்கதைக்காகவா? என்று சந்தேகக் கண் கொண்டு வலைத்தளவாசிகள் பலரும் பலவிதத்தில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
இந்த கேள்விகளுக்கு கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகி வரும் 'பெங்குயின்' படத்தின் சுவரொட்டிதான் அது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
'பீட்சா' தொடங்கி ரஜினியின் 'பேட்ட' என இயக்கத்தில் கலக்கிவரும் கார்த்திக் சுப்பராஜ், 'மேயாத மான்', 'மெர்க்குரி' என தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான நேற்று அந்தப் படத்தின் தலைப்பு சுவரொட்டியில் கீர்த்தியின் உருவம் நிழல் போல தெரிய, அவரது வயிற்றுப் பகுதி வீங்கி கர்ப்பவதியாக இருப்பதாக காட்டப்பட்டிருந்தது.
'நடிகையர் திலகம்' படத்திற்கு பிறகு நல்ல நடிப்புக்கு தீனி போடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷுக்கு 'பென்குயின்' படமும் நல்ல படமாக அமையும் வாய்ப்புகள் முதல் பார்வையிலே தெரிவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
தமிழ், தெலுங்கில் தனக்கான மிகப்பெரிய வாய்ப்பை கீர்த்தி வைத்திருப்பதால் இந்தப் படமும் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது.
பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்திலும் தெலுங்கில் 'மிஸ் இந்தியா' படத்திலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்து 'பென்குயின்' படத்திலும் நடித்து வருகிறார்.
அத்துடன் ரஜினியின் 168வது படம், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே ராணாவின் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் ராணா சமீபகாலமாக படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். விரைவில் புகழ்பெற்ற கொரியன் படம் ஒன்றை தமிழ், தெலுங்கில் மறுபதிப்பு செய்ய இருக்கிறார். இதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் ராணா. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பாலிவுட்டில் ஒரு படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் ராணா படத்தில் நடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இவருக்கு பதில் நயன்தாராவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

