வெற்றிமாறனின் வருத்தம்

வெற்றிமாறனின் வருத்தம்

2 mins read
2bd428af-0786-49f4-a0c4-6584e47d30a6
-

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த 'அசுரன்' படம் கடந்த 4ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் "இது வட சென்னையை விட நன்றாக இருக்கிறது," என்று பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் மும்பை திரைப்பட விழாவில் பேசிய வெற்றிமாறன் 'அசுரன்' குறித்து கூறியதாவது, "நான் இந்தப் படத்தை முடித்தவிதம் எனக்கு திருப்திகரமாக இல்லை. மக்களுக்கு படம் பிடித்துள்ளது. நல்ல வசூலும் செய்து கொண்டிருக்கிறது. அதில் மகிழ்ச்சிதான் என்றாலும் படத்தை முடித்த விதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

"22 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்தபோது படத்தை 40 நாட்களில் வெளியிடவேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். என்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் 'அசுரன்'. எனக்கு சிறிதும் திருப்தி இல்லாத படமும் இதுதான்," என்று ஆதங்கப்பட்டார்.

அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பார்த்துப் பார்த்து படம் இயக்குபவர் வெற்றிமாறன். ஆனால் 'அசுரன்' படத்தை விரைந்து முடிக்க அவரை அவசரப்படுத்தியதால் அவரால் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போனது.

அவசரம், அவசரமாக எடுத்த படமே இவ்வளவு நன்றாக வந்துள்ளது என்றால், வெற்றிமாறனை நிம்மதியாக வேலை செய்யவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமே என்று வருந்துகின்றனர் அவரின் ரசிகர்கள்.

படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வரும் வேளையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் படக் குழுவைப் பாராட்டியுள்ளார்.

அவர் தன்னுடைய டுவிட்டரில், "அசுரன் உண்மையை விளக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். சிறந்த படைப்பு. தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்," என பதிவிட்டுள்ளார்.

பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய இந்தப் படம் தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறையை வெளிச்சம் போட்டுக்காட்டி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.