நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து நாயகர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவதுடன் தொழில் முனைவராகவும் சிறந்து விளங்குகிறார் 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா' என்ற பாடலுக்கு உரியவரான டாப்சி.
பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, சுய உந்துதலுடன் செயல்படும் பெண்ணான டாப்சி மென்பொருள் பொறியாளராக இருந்து, திரை நட்சத்திரமாக உருவாகி, சமீபத்தில் தொழிலில் ஈடுபட்டது என தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டுமே முக்கியம். நீங்கள் இறக்கத்தை சந்திக்காமல் போனால் உங்களால் ஏற்றத்தை ரசிக்கமுடியாது. எது உங்களை காயப்படுத்தியதோ அதுவே உங்களை வலுவாக்குகிறது என்று ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
"நான் ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கும்போதும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று பலரும் சொல்லும்போதும் அவர்கள் முன்பு என்னுடைய திறனை நிச்சயம் வெளிப்படுத்துவேன் என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன்.
"நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். அந்த தவறுகளால் நான் தோற்றுப்போவதற்கு பதிலாக அவற்றில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த நம்பிக்கை உணர்வே நான் தொடர்ந்து செயல்பட உதவுகிறது.
"நடிகர்களாக நாங்கள் மக்களை மகிழ்விக்கவேண்டும். எங்களை விரும்பு
பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே எங்கள் தொழில் தொடர்ந்து செயல்படும்.
"பெரும்பாலான நேரங்களில் தோல்வி என்பது நம்மை நெருங்காது என்கிற மாயையில் நாம் வாழ்கிறோம். ஏதோ தவறு நடக்கிறது என்பதை கவனிக்க மறுத்துவிடுகிறோம். நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிய சூழல் ஏற்படும்போது நாம் மீண்டும் புதிதாக ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்," என்று மனம் திறந்து பேசினார் டாப்சி.
'ஆடுகளம்' திரைப்படத்தில் தனுஷுடன் அறிமுகமாகி, 'பின்க்' திரைப்படத்தில் மினல் அரோராவாகவும் சமீபத்தில் 'பத்லா' திரைப்படத்தில் நைனாவாகவும் அறிந்திருப்பீர்கள். ஆனால், பாலிவுட் நடிகை, தேசிய திரைப்பட விருது வென்றவரான டாப்சி சராசரி நாயகியைக் காட்டிலும் கூடுதல் சிறப்புமிக்கவர்.
டாப்சி பி.டெக் பட்டதாரியான டாப்சி 'தி வெட்டிங் ஃபேக்டரி' என்கிற திருமண திட்டமிடல் நிறுவனத்தைத் தொடங்கி தொழில்முனைவராக இருக்கிறார்.
ஒவ்வொரு புதிய முயற்சியை மேற்கொள்ளும்போதும் கூடுதல் வலுப்பெற்றவராகவே மிளிர்கிறார் டாப்சி. கல்லூரி நாட்களில் முதலில் மாடலாக செயல்பட்ட இவர் இன்று 42க்கும் அதிகமான திரைப்
படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த 'பிங்க்', 'பத்லா', 'நாம் சபானா', 'மிஷன் மங்கள்' போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன. நடிக்கும் படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி வசூலை வாரிக் குவித்து வருவதால், வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன. இதனால் டாப்சிக்கு சம்பளமும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில் "திரைத்துறையில் தற்போதுதான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்குக் கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்.
"இந்தியில் முன்னணி நாயகிகள் ரூ.20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதே இந்த மாற்றத்துக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுபோன்ற சில படங்களில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் என்னுடைய சம்பளமும் உயர்ந்திருக்கிறது. நான் அதற்கேற்ற உழைப்பையும் அளித்திருக்கிறேன்.
"என்னதான் சம்பளம் உயர்த்தி கேட்டாலும் அது கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை" என்று மனம் திறந்தார் டாப்சி.

