ராய் லட்சுமி நடித்துள்ள படம் 'சிண்ட்ரல்லா'. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள 'கிளாமர் கேர்ள்' என்ற பிம்பத்தை உடைத்து அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரும் என்கிறார் படத்தின் இயக்குநர்.
ராய் லட்சுமி தனி நாயகியாக நடித்து வரும் படம் 'சிண்ட்ரல்லா'. ரோபோ சங்கர், கல்லூரி வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். 'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா உதவியாளர் வினோ வெங்கடேசன் இயக்கி உள்ளார்.
'சிண்ட்ரல்லா' என்பது மேற்கத்திய நாடுகளில் குழந்தை களுக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் தேவதை. இந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி பல 'ஹாலிவுட்' படங்கள் இதே பெயரில் வந்திருக்கின்றன. அதனால் இந்தப்படம் 'ஹாலிவுட்' படங்களின் தழுவல் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுக்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேசன்.
இதுகுறித்து அவர் கூறும்போது: "சிண்ட் ரல்லா கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு 'ஹாலிவுட்' படங்கள் வந்திருப்பது உண்மைதான். இந்தப் படத்திலும் ராய் லட்சுமி 'சிண்ட்ரல்லா' வேடத்தில்தான் நடித்திருக்கிறார். பாடகியாக மற்றொரு வேடத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் படத்தின் கதை 'ஹாலிவுட்' படங்களின் தழுவலோ காப்பியோ இல்லை.
"இதுவும் ஒரு வகையில் பழிவாங்குகிற கதைதான். ஆனால் இதன் திரைக்கதை இதுவரையில் சொல்லப்படாத வகையில் இருக்கும். 'சிண்ட்ரல்லா' வரும் காட்சிகளில் 'கிராபிக்ஸ்' அதிகம் இருக்கும்.
"ராய் லட்சுமிக்கு 'சிண்ட்ரல்லா'
வேடம் எப்படி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதுதான் அந்த வேடத்தின் உருவாக்கம். மற்றபடி இது 'சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர்' என்பதால் விரிவாக சொல்ல இயலாது," என்றார்.
இந்தப் படத்தில் சாக்ஷி அகர்வால் வில்லி வேடம் ஏற்றிருக்கிறார். அந்த வேடம் படத்தில் மிகவும் பேசப்படும் என்கிறார் படத்தின் இயக்குநர்.
இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை. கதையைத்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ளது இந்தப் படம். இப்படத்திற்கு கட்டாயம் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்கிறார் இயக்குநர்.

