ஸ்ரீநிதி: மொழி தெரிந்திருப்பது நடிகைக்கு மிகவும் முக்கியம்

ஸ்ரீநிதி: மொழி தெரிந்திருப்பது நடிகைக்கு மிகவும் முக்கியம்

3 mins read
fdecc41c-eb51-4a25-aa5a-5ca83388f4a3
-

நடிகர் விக்ரமின் 58ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாகி உள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. பூர்வீகம் கர்நாடகா என்றாலும் கோலிவுட்டில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் இவரது கனவாம்.

கன்னடத்தில் இவர் நடித்த 'கேஜிஎஃப்' படம் பெரும் வசூலைக் குவித்துள்ளது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இரண்டாம் பாகம் வெளியான பிறகு மற்ற படங்கள், மொழிகளில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தாராம்.

அதற்குள் இயக்குநர் அஜய் ஞானமுத்து இவரைத் தேடி வந்திருக்கிறார். அவர் சொன்ன கதை பிடித்துப்போகவே கோடம்பாக்கத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கிவிட்டார் ஸ்ரீநிதி.

"விக்ரம் சார் படங்களைப் பார்த்து வளர்ந்த ரசிகை நான். இன்று அவருடன் இணைந்து நடிப்பது ஒரு கனவைப் போல் இருக்கிறது. அவரது நடிப்புக்கு நானும் ஈடு கொடுக்க வேண்டுமே என்ற கவலை மட்டும்தான் மனதை ஆக்கிரமித்துள்ளது.

"எல்லோரும் 'கேஜிஎஃப்'பில் எனது நடிப்பைப் பார்த்துதான் அஜய் ஞானமுத்து தனது படத்துக்காக என்னைத் தேர்வு செய்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

"அந்தப் படத்தில் எனது நடிப்பு அவருக்குப் பிடித்திருந்தாலும், தான் உருவாக்கி உள்ள கதைக்குப் பொருந்தமாட்டேன் என்றுதான் நினைத்திருக்கிறார். நல்ல வேளையாக நான் அளித்த சில தொலைக்காட்சி பேட்டிகளைப் பார்த்த பிறகு மனம் மாறிவிட்டார்," என்கிறார் ஸ்ரீநிதி.

பேட்டிகளைப் பார்த்த கையோடு ஸ்ரீநிதியைத் தொடர்புகொண்டாராம் அஜய் ஞானமுத்து. அதன் பிறகு ஒப்பனை, நடிப்புத் தேர்வு முடிந்த கையோடு படப்பிடிப்பில் பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்.

ஸ்ரீநிதியைப் பொறுத்தவரை தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்கிறார். அந்த வகையில் தமிழ்ப் படத்தில் நடிப்பதால் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். அதனால் தற்போது தமிழ் கற்று வருகிறாராம்.

"பலரும் சொல்வதைத்தான் நானும் சொல்லப் போகிறேன். மொழி தெரியாமல் ஒரு படத்தில் நடிப்பது தவறு. ஏனெனில் வசனங்களுக்கான அர்த்தம் புரியாமல் நடித்தால் நாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் முழுமையாகத் திறமையை வெளிப்படுத்த முடியாது. எனவே மொழி என்பது முக்கியம்.

"தெலுங்குப் பட வாய்ப்பு தேடி வந்ததுமே அம்மொழியில் பேசத் தொடங்கிவிட்டேன். தற்போது நான் பேசும் தெலுங்கு மற்றவர்களுக்கு ஓரளவு புரிகிறது. அதேபோன்று ஈடுபாட்டையும் உழைப்பையும்தான் தமிழ்ப் படங்களிலும் வெளிப்படுத்துவேன்," என்கிறார் ஸ்ரீநிதி.

தமிழ் மொழி மற்ற மொழிகளை விட பேசுவதற்குச் சற்று கடினமாக இருப்பதாகக் குறிப்பிடுபவர், அவர் அதையும் கடந்து மொழியைக் கற்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பதாகச் சொல்கிறார்.

'மேலும் இயக்குநர் அஜய் சாரும் வசனங்களுக்கான எனது உதட்டு அசைவுகள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டார். அதனால் தான் கூடுதலாக மெனக்கெடுகிறேன்," என்கிறார் ஸ்ரீநிதி.

படங்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் இவர் கொஞ்சம் கூட அவசரப்படுவதே இல்லை. முதலில் கதை கேட்கிறார், பிறகு அதில் தனது கதாபாத்திரத்தின் தன்மை குறித்து கேட்டறிகிறார். அதன் பிறகே இறுதி முடிவெடுக்கிறார்.

"'கேஜிஎஃப்' படத்துக்காகவே கடந்த நான்கு ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறேன்.

"மேலும் ஆறு அல்லது எட்டு மாதங்கள் காத்திருந்தால் அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்துவிடும். எனினும் அஜய் ஞானமுத்துவின் கதை பிடித்துப் போனதால் மனதை மாற்றிக்கொண்டேன். தமிழில் பெயரெடுத்தால் உலகளவில் பிரபலமாகிவிடலாம் எனப் பலரும் சொல்கிறார்கள்.

"எனக்கும் அப்படிப்பட்ட வாய்ப்பு தேடி வந்துள்ளது. அந்த வகையில் நான் அதிர்ஷ்ட சாலி," என்கிறார் இளம் நாயகி ஸ்ரீநிதி.