அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களுக்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சரணை இடையில் சில காலம் கோடம்பாக்க வட்டாரங்களில் காண முடியவில்லை. இந்நிலையில் இளையர்களைக் கவரும் முடிவோடு மீண்டும் தெம்புடன் களம் இறங்கியுள்ளார்.
அவரது இயக்கத்தில் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருவதும், அதில் 'பிக்பாஸ்' புகழ் ஆரவ் நாயகனாக நடிப்பதும் தெரிந்த சங்கதிதான்.
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"ரத்தம், சத்தம், துரோகம், குரோதம் என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில் வேறோர் உலகம் ஒளிந்து கிடக்கிறது. அந்த உலகத்தைப் புகைப்பட ஆல்பம் போன்று புரட்டிக் காட்டப் போகிறேன்," என்று உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் சரண்.
அதே சமயம் வணிகப் படங்களில் காணக்கூடிய நகைச்சுவை, காதல், பேய், குடும்ப உணர்வுகள் என்று அனைத்து வகை அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்குமாம்.
இது 'வசூல்- ராஜா' படத்தின் தொடர்ச்சியா என்று கேட்டால், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தவறான தகவலைப் பரப்பிவிடாதீர்கள்," என அவசர அவசரமாகக் கேட்டுக்கொள்கிறார்.
"இரு படங்களுக்கும் நான்தான் இயக்குநர் என்பதைத் தவிர, வேறெந்த தொடர்பும் இல்லை. கதைப்படி ரவுடியாக உள்ள கதாநாயகனுக்கு இந்த உலகத்தில் யாருக்குமே ஏற்படாத பிரச்சினை ஒன்று தேடி வருகிறது.
"அதை அவன் எப்படி எதிர்கொண்டு சமாளித்து எழுந்து நிற்கிறான் என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை," என்று சொல்லும் சரணுக்கு, இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் எனும் உத்வேகத்தை அளித்ததே அவரது செல்ல மகள்தானாம்.
அப்பா நீங்கள் ஏன் திகில் படங்கள் எதையும் இயக்கவில்லை என்று ஒருநாள் செல்ல மகள் கேட்டதும்தான் இவருக்குப் புதிய எண்ணங்கள் தோன்றியதாம்.
"எனக்கு லாரன்ஸ் பாணியில் படம் எடுக்கத் தெரியாது. ஆனால் அவர் நடித்த 'முனி' நான் தயாரித்த படம். அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவின் திகில் பட வரிசைக்குத் தொடக்கப் புள்ளி வைத்ததே நான்தான்.
"இந்தப் படத்தின் நாயகன் என்ற வகையில் தனது பங்களிப்பைக் கச்சிதமாக அளித்துள்ளார் ஆரவ். ரவுடி வேடத்துக்கு ஏற்ப தன்னைக் கச்சிதமாக மாற்றிக்கொண்டு நடித்தார். அவரது தாயாக 'பட்டாளம்' சுந்தரிபாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். எம்.ஆர். ராதாவின் வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார். நாயகி காவ்யா தாப்பர் இந்தப் படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்பே, விஜய் ஆண்டனி படத்தில் நாயகியாகி விட்டார்," என்கிறார் சரண்.
இசையமைப்பாளர்களை மாற்றினாலும் பாடல்கள் என்று வரும்போது வைரமுத்துவைத்தான் இவர் நாடுவது வழக்கம்.
"ஆனால், இந்த முறை ஒரு மாற்றத்துக்காக கவிஞர் ரோகேஷ், கார்த்திக், தமயந்தி என புதிதாக ஓர் அணியை உருவாக்கி உள்ளோம். சைமன் கே. கிங் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் அருமையாக இருக்கும்.
"இயக்குநர் சசிகுமார் படங்களில் இறுதிக் காட்சி வரை எல்லோரும் நட்பு... நட்பு என்று மறக்காமல் சொல்வார்கள். முன்பெல்லாம் அதைக் கேட்கும்போது எரிச்சலாக வரும். காரணம் நட்புகளால்தான் எனக்குச் சரிவு ஏற்பட்டது. அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பியது என் தவறுதான்.
"நட்பு என்ற பெயரில் எனக்கு நடந்திருப்பது துரோகம், நம்பிக்கை மோசடி என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.
"அந்த துக்கத்தை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் சுமந்தபடி தவித்துக்கொண்டிருந்தேன். கண்மூடித்தனமாக ஒருவரை நம்புவதால் ஏற்படும் வலி அது. ஓர் ஓவியத்தைத் தீட்டும்போது காகிதத்துக்கு வலிக்கும் என்பதாலேயே பென்சிலுக்குப் பதில் பிரஷ் பயன்படுத்துவேன். அந்த அளவுக்கு நான் மென்மையானவன்.
"என்னைப் பொறுத்தவரை காதலிப்பது தவறு இல்லை. அதேபோல் நட்பிலும் தவறு காண முடியாது என்ற பிறகு மனதில் இருந்த வீண் எரிச்சல் போய்விட்டது," என்று மீண்டும் பழைய உற்சாகத்துடன் பேசுகிறார் சரண்.

