மக்கள்: படத்தில் மட்டும் வீராவேசமாக பேசுகிறார் விஜய்

மக்கள்: படத்தில் மட்டும் வீராவேசமாக பேசுகிறார் விஜய்

3 mins read
4ad6af57-21e9-48e8-a8ec-27ab0663f936
-

விஜய் நடித்த 'பிகில்' படம் நேற்று வெளியாக தாமதமானதால் விஜய் ரசிகர்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். அதற்கு மக்கள் "ஏன் விஜய் தன்னுடைய ரசிகர்களை இதுபற்றி கண்டிக்கவில்லை," என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்த 'பிகில்' படம் நேற்று வெளியானது. வியாழன் இரவு 10 மணிக்கு மேல் இப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதால் நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். சில தியேட்டர்களில் ஒரு மணி நேரம் தாமதமாக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டன.

கிருஷ்ணகிரியில் 'பிகில்' சிறப்புக்காட்சி நள்ளிரவில் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு, ரவுண்டானா பகுதியில் உள்ள போலிசாரின் தடுப்புகளையும் 'சிசிடிவி' புகைப்படக் கருவிகளையும் உடைத்தனர். கற்களையும் வீசி தாக்கியதால், ரகளையில் ஈடுபட்டவர்களை போலிசார் விரட்டியடித்தனர். இது தொடர்பாக 34 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

"'பிகில்' இசை வெளியீட்டின்போது, 'என் மீது வேண்டுமானாலும் கை வையுங்கள், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்,' என மேடையில் வீராவேசம் பேசினார் விஜய். அதன்பிறகு இங்கு பல பிரச்சினைகள் நடந்தன. ஆனால் எதுவும் பேசாமல் 'உம்முனு, கம்முனு, ஜம்முனு' வெளிநாடு பறந்துவிட்டார் நடிகர் விஜய்.

"அவரது ரசிகர்களோ பொது சொத்தை சேதப்படுத்தி அடிதடியில் ஈடுபட்டனர். விஜய் இதைக் கண்டிக்க மாட்டார். அவருக்கென்ன ஒரு படத்தில் நடிக்கவேண்டியது, படம் வெளியாகும்போது ஏதாவது பரபரப்பாகப் பேச வேண்டியது, அதை வைத்து படத்திற்கு ஒரு பெரிய விளம்பரம் தேட வேண்டியது. இதையே ஒவ்வொரு படத்திற்கும் வாடிக்கையாக கொண்டுள்ளார் விஜய்.

"நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே 'பஞ்ச்' வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் அடிதடிகளை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை. இத்தகைய அநாகரிகமான செயல்களுக்கு விஜய் போன்ற நடிகர்கள் கண்டனம்கூட தெரிவிப்பதில்லை," என்று குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

'பிகில்' படம் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. ஆனால், விஜய்யோ தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கிவிட்டார். விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா போன்றோரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி உள்ளனர்.

'பிகில்' படத்தின் காலைக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள், "படத்தில் ராயப்பனாகவும் பிகிலாகவும் பயிற்சியாளர் மைக்கேலாகவும் விஜய் தனது கதாபாத்திரத்தை நன்கு புரிந்து நடித்துள்ளார். முதல் பாதி நீளமாக உள்ளது. படம் மெதுவாக செல்வது திரையரங்கத்தில் உள்ளவர்களை சிறிது எரிச்சல் அடைய வைக்கிறது.

"அட்லி சற்று தடுமாறியுள்ளார். ஆனால் அதை இரண்டாம் பாதியில் சரி செய்துவிட்டார். விஜய் ரசிகர்களுக்காக பார்த்து, பார்த்து சில காட்சிகளை வைத்துள்ளார் அட்லி.

"நயன்தாராவுக்கு விஜய்யை காதலிப்பதை தவிர பெரிதாக வேலை இல்லை. இருப்பினும் நயன், விஜய் சேர்ந்து வரும் காட்சிகள் அருமையாக உள்ளன. பெண்கள் முன்னேற்றம் பற்றிய படம் என்பதைக் காட்ட முயன்று வெற்றியும் கண்டுள்ளனர்.

'பிகில்' விஜய் ரசி-கர்-க-ளுக்கு தீபா-வளி விருந்தாக அமைந்துள்ளது.