வருகிறாள் 'ரங்கநாயகி'

வருகிறாள் 'ரங்கநாயகி'

3 mins read
427084dc-2857-4961-bfdd-9a61875092d6
அதிதி பிரபுதேவா. -

இன்றைய இளம் நாயகிகள் சமூக நலன் கருதி, நல்ல கருத்துகளுடன் உருவாகும் திரைப்படங்களில் தயக்கமின்றி நடிக்க வேண்டும் என்கிறார் இளம் நாயகி அதிதி பிரபுதேவா.

கன்னடத் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நாயகிகளில் இவரும் ஒருவர். சொந்த ஊர் தெற்கு கர்நாடகாவில் உள்ள தேவநகரி.

தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள 'ரங்கநாயகி' ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்துமாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் சில காமுகர்களால் சீரழிக்கப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது இந்தப் படம். அந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிக்கித் தவித்து, பல நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார் நிர்பயா.

அனைத்துத் தரப்பினரையும் பதறவும் கதறவும் வைத்த இந்த கொடூரச் சம்பவத்தையும் 'ரங்கநாயகி'யில் காட்சிப்படுத்தி இருப்பதாகத் தகவல்.

தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். அவர் முன்பே எழுதி வெளியிட்ட நாவலைத்தான் படமாக்கி உள்ளாராம்.

"பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த நிர்பயா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்ற கற்பனையே இந்த நாவல் உருவாகக் காரணம். நிர்பயாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த வேறு சில சம்பவங்களையும் இதில் தயாள் பத்மநாபன் விவரித்துள்ளார்.

"இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சிப் பதுமையாகவே வலம் வந்திருக்கிறேன். இத்தகைய வேடங்களால் மனம் சலிப்படைந்துள்ளது.

"அந்த சலிப்பில் இருந்து விடுபடும் வகையில் இந்த வாய்ப்பு தேடி வந்தது. அதனால் மன நிறைவுடன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்," என்கிறார் அதிதி பிரபுதேவா.

தொடக்கத்தில் இப்படியொரு உணர்வுப் பூர்வமான கதையில் நடிப்பது குறித்து இவருக்கும் தயக்கம் இருந்ததாம். நடித்து முடித்த பிறகு வேறு ஏதேனும் சர்ச்சைகள் முளைக்குமோ என்றும் கவலைப்பட்டாராம்.

"ஆனால் இந்தப் படம் இந்தியன் பனோரமாவின் திரைப்பட விழாவில் திரையிடப்படத் தேர்வானதும் மகிழ்ச்சி ஏற்பட்டது. 83 படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ரங்கநாயகி' தேர்வு பெற்றதில் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

"இதன் மூலம் தரமான கதைகள், சமூகத்துக்குத் தேவையான நல்ல படைப்புகள் மட்டுமே உரிய அங்கீகாரத்தைப் பெறும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, நல்ல படைப்புகளுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதையும் இந்தத் தேர்வு எனக்கு உணர்த்தியுள்ளது," என்கிறார் அதிதி பிரபுதேவா.

மற்ற நடிகைகளைப் போல் தமக்கும் கனவுக் கதாபாத்திரங்கள் இருப்பதாக குறிப்பிடுபவர், அத்தகைய ஒரு கதாபாத்திரமாக 'ரங்கநாயகி' அமைந்துள்ளது என்கிறார்.

"நாம் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் தேடி வந்தாலும், சில சமயம் மனதில் தயக்கம் உண்டாகும். அந்த வேடத்தில் நடிக்கலாமா வேண்டாமா என யோசிக்கத் தோன்றும். பேசாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்துவிட்டுப் போகலாமே என்று சிலர் நமக்கு அறிவுரையும் கூறுவர்.

"நானும் இவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். வழக்கமான கதாபாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, என் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கான பரிசுதான் இந்தப் படம்," என்று உற்சாகத்துடன் சொல்லும் அதிதிக்கு, கிரிக்கெட் விளையாட்டுதான் ரொம்பப் பிடித்தமானதாம்.

ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பாராம். பிடித்தமான பாடல்களைக் கேட்பதும் பிடிக்கும் என்கிறார்.

"பழைய பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். அவற்றைக் கேட்கும் போது மனதில் இனம்புரியாததோர் அமைதியும் நிம்மதியும் ஏற்படுவதாக உணர்கிறேன். அதே சமயம் அதிரடியான ராப் இசைப் பாடல்களையும் கேட்பேன்.

"நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வது, நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது பிடிக்கும். அத்தகைய படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதுவரை எனது திரைப்பயணம் மகிழ்ச்சிகரமாகவே இருந்துள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்," என்கிறார் அதிதி பிரபுதேவா.

'ரங்கநாயகி' விரைவில் வெளியீடு காண்கிறது.