உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவரும் மூத்த நடிகை பரவை முனியம்மாவுக்கு நடிகர் அபி சரவணன் உதவி செய்துள்ளார்.
85 வயதான முனியம்மாவைத் திரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டுப்புறப் பாடகியான இவர், மேடை நிகழ்ச்சிகளில் மட்டுல்லாமல் திரைப்படங்கள் மூலமாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான 'தூள்' படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. மேலும் அந்தப் படத்தில் இவர் பாடிய 'சிங்கம் போல' பாடல் உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அதன் பிறகு சிறிய, பெரிய கதாபாத்திரங்கள் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பரவை முனியம்மா. கடந்த 2014ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' தான் இவரது கடைசி படம்.
அதன் பின்னர் உடல்நலம் குன்றியதால் படங்களில் நடிக்க முடியவில்லை. வருமானம் இல்லாமல் தவித்து வந்த இவரது நிலை குறித்து அறிந்த காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா முனியம்மா பேரில் 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகச் செலுத்தப்படும் என்றும் அதில் கிடைக்கும் வட்டி அவரது வாழ்க்கைச் செலவினங்களுக்குக் கைகொடுக்கும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த பரவை முனியம்மாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. தனக்குத் திரைக்கலைஞர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முனியம்மாவின் மருத்துவச் செலவுகளை ஏற்பதாக நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், துணிமணிகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் அபி சரவணன் வாங்கித் தந்துள்ளார்.
முனியம்மாவின் உடனடித் தேவைகளுக்காக பண உதவியும் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், மூத்த கலைஞரான பரவை முனியம்மாவுக்குத் திரையுலகத்தினர் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே பரவை முனியம்மாவுக்கு உதவி செய்ய நடிகர் சங்கத் தலைவர் விஷாலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

