'கைதி'யில் கார்த்தியின் நடிப்பு எந்தளவுக்குப் பாராட்டப்பட்டதோ, அதே போல் நடிகர் நரேனும் ரசிகர்களால் மெச்சப்படுகிறார்.
'சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் பிரபலமடைந்த இவருக்கு அதன் பிறகு எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில் 'கைதி' மூலம் கோடம்பாக்கத்தில் இரண்டாவது சுற்றைத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார் நரேன்.
"கடந்த 2008ஆம் ஆண்டு நான் நடித்த 'அஞ்சாதே' வெளியானது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அந்த வெற்றியை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்.
"இந்நிலையில் 'கைதி' படம் குறித்து கார்த்தி என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். தொடக்கத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. காரணம், காவல்துறை அதிகாரி வேடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதிலேயே நான் குறியாக இருந்தேன். என்னுடைய நல்ல நண்பர் என்ற வகையில் கார்த்திக்கும் இது தெரியும்.
"இந்நிலையில் 'கைதி' படத்தின் முழுக் கதையையும் கேட்குமாறு சொன்னார் கார்த்தி. அவ்வாறு கேட்ட பிறகு இந்தப் படத்தை விட்டு என்னால் வெளியேற முடியவில்லை. அந்தளவுக்கு நேர்த்தியான கதையைக் கூறினார் இயக்குநர்."
மலையாளத்திலும் நரேன் போலிஸ் அதிகாரியாக அதிகம் நடித்துள்ளாராம். அவற்றுக்குப் பாராட்டும் வரவேற்பும் கிடைத்ததுடன் மேலும் பல பட வாய்ப்புகளும் தேடி வந்தனவாம்.
"ஆனால் தமிழில் எனக்குச் சூழ்நிலை சாதகமாக அமையவில்லை. நான் ஒப்பந்தமான சில படங்களுக்கு முன்பணம் வாங்கியதோடு சரி. அவற்றின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. சில படங்கள் பாதியில் கைவிடப்பட்டன. ஒன்றிரண்டு படங்களில் முழுமையாக நடித்து முடித்தும் கூட அவை வெளியாகவில்லை. ஒரு நடிகராக நான் முழுத் திறமையை வெளிப்படுத்த மட்டுமே இயலும். அதன் பிறகு எதுவும் என் கையில் இல்லை," என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் நரேன்.
இந்நிலையில் 'கைதி'யின் வெற்றி இவருக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் ஒருசேர அளித்துள்ளது. இனிமேல் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்திருக்கிறார்.
"மலையாளத்தில் ஒரு மாதத்திற்குள் அல்லது அதிகபட்சமாக ஒன்றரை மாதங்களுக்குள் படத்தை முடித்து விடுவார்கள். ஆனால், தமிழில் ஒரு படத்துக்கு இதைவிட 3 மடங்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கும்.
"தமிழில் 'முகமூடி' படத்துக்காக இரண்டாண்டுகளை ஒதுக்க நேரிட்டது. மலையாளத்தில் இரண்டாண்டுகள் திரையில் தோன்றவில்லை என்றால் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். எனக்கும் அதுதான் நேரிட்டது.
"மிக அற்புதமான கதைகளும் வாய்ப்புகளும் தேடி வந்தபோது அவற்றை ஏற்க முடியவில்லை. காரணம், கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை.
"நான் ஒன்றும் பெரிய நட்சத்திரம் அல்ல. மார்க்கெட் இல்லாத எனக்காக ஏன் சிலர் காத்திருக்க வேண்டும்?" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் நரேன். ஒருவேளை தமிழ், அல்லது மலையாளத்தில் ஏதேனும் ஒரு மொழியில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் பெரிய நாயகனாக உருவாகியிருக்க முடியும் என நம்புகிறாராம். இனி தமிழில் தாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நரேன்.

