நிக்கி கல்ராணி: நான் ஆடை வடிவமைப்பாளராக விரும்பினேன்

நிக்கி கல்ராணி: நான் ஆடை வடிவமைப்பாளராக விரும்பினேன்

2 mins read
34ad6485-0802-4803-bec0-95a2b382c217
ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பது தான் நிக்கி கல்ராணியின் சிறு வயது ஆசையாம். எப்படியோ திசை மாறி நடிகையாகி விட்டதாகச் சொல்கிறார். -

ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பது தான் நிக்கி கல்ராணியின் சிறு வயது ஆசையாம். எப்படியோ திசை மாறி நடிகையாகி விட்டதாகச் சொல்கிறார்.

இந்த வருடம் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடினாராம். இவர் படித்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில்தானாம். அந்த ஊரைப் போலவே சென்னை மாநகரமும் தனக்குப் பிடித்தமானதாகிவிட்டது என்கிறார்.

"என் பெற்றோருக்கு நான் மருத்துவராக வேண்டும் என்று ஆசை. ஆனால் ஊசி, ரத்தம் என்றாலே எனக்கு உடல் நடுங்கத் தொடங்கிவிடும். அதனால் மருத்துவப் படிப்பு பக்கம் போகவே மாட்டேன் என்று எனக்கு விவரம் தெரிந்த உடனேயே அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.

"அதன் பிறகு வடிவமைப்புத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அந்தத் துறையில் சாதிப்பதற்குள், சினிமாவுக்கு வந்துவிட்டேன்," என்கிறார் நிக்கி.

தனது மூத்த சகோதரியும் நடிகையுமான சஞ்சனாவை விட, தற்போது நிக்கி பரபரப்பான நடிகையாகிவிட்டார். அக்காவைப் பின்பற்றி இவரும் திரையுலகில் கால்பதிப்பார் என்று தான் குடும்பத்தார் கூறி வந்தனராம்.

ஆனால் நிக்கியோ, ஒருமுறை கூட படப்பிடிப்புக்குச் சென்றதில்லை. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் தவிர்த்து விடுவாராம்.

இந்நிலையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. முயற்சி செய்து பார்ப்போம் எனும் எண்ணத்தில்தான் களமிறங்கி இருக்கிறார்.

"நிறைய விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தான், நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. மலையாளத்தில் '1983' என்ற படத்தில் நடித்தேன். அடுத்து கன்னடத்திலும் அறிமுகமானேன். அது தமிழில் வெளியான 'பையா' படத்தின் மறுபதிப்பு. இரு படங்களும் வெற்றி பெற்றதால் தமிழ் திரையுலகமும் என்னைக் கவனிக்கத் தொடங்கியது.

"'யாகாவாராயினும் நா காக்க' மூலம் தமிழுக்கும் வந்துவிட்டேன். தமிழ் ரசிகர்களின் ஆதரவு என்னை வேகமாக வளர வைத்துள்ளது," என்கிறார் நிக்கி.

'சின்ன மச்சான்', 'ரவுடி பேபி' ஆகியவைதான் இவர் அண்மைக் காலமாக அதிகம் முணுமுணுக்கும் பாடல்கள். ஓய்வு கிடைத்தால் பழைய பாடல்களையும் கேட்டு ரசிப்பாராம்.

வாழ்த்து அட்டைகள் சேகரிப்பது நிக்கிக்குப் பிடித்தமான மற்றொரு பொழுதுபோக்கு. தனது பள்ளி நாட்களில் தொடங்கி இன்று வரை கிடைத்த வாழ்த்து அட்டைகளை வீட்டில் குவித்து வைத்திருக்கிறார். அதே போல் பல வண்ண பொம்மைகளையும் சேகரித்துள்ளாராம். அவற்றை யாரேனும் தொட்டுவிட்டால் பயங்கர கோபம் வருமாம்.