தன்ஷிகா என்றாலே அதிரடிதான். சிலம்பம், இரு சக்கர வாகனத்தில் வேகமான சவாரி, குதிரை ஏற்றம் என்று எத்தகைய சவாலுக்கும் எப்போதுமே தயாராக இருக்கிறார்.
தற்போது இவர் நடித்து வரும் படம் 'யோகி டா'. இதிலும் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். 'கடைசியில் உங்களை ஆக்ஷன் நாயகியாக மாற்றிவிட்டார்களே..' என்று கேட்டால், சிரித்தபடி ஆமோதிக்கிறார்.
"உண்மைதாங்க. நல்ல கதைக் களம் என்பதால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது என்னுடைய உறவினர் அருணகிரியும் அவரது நண்பர் ராஜ்குமாரும் இணைந்து தயாரிக்கும் படம்.
"மிகுந்த தைரியசாலியான ஒரு பெண்ணை மையப்படுத்திக் கதை சொல்கிறார் இயக்குநர். ஒரு பெண்ணால் இந்தச் சமூகத்தின் சூழல்களை, பிரச்சினைகளை எப்படியெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை," என்கிறார் தன்ஷிகா.
கௌதம் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 80 விழுக்காடு முடிந்து விட்டதாம். படப்பிடிப்புக்கு முன்பே தீவிர உடற்பயிற்சி, சண்டைப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு இயக்குநர் அறிவுறுத்தினாராம்.
"அவர் சொன்னபடியே செய்தேன். சண்டைப் பயிற்சியாளர் கணேஷ் மாஸ்டர் கடுமையான பயிற்சிகளை அளித்தார். இதுவரை ஐந்து சண்டைக் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம். மேலும் இரண்டு காட்சிகள் உள்ளன.
"ஒரு பெண் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்கள் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் எனும் பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன். எனவே, கடுமையாக உழைத்து வருகிறேன்," என்கிறார் தன்ஷிகா.
இதையடுத்து சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகும் 'இருட்டு' படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும் ஒரு நேரடித் தெலுங்குப் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாராம்.
தன்ஷிகாவின் குரல் வித்தியாசமாக, தனித்துவம் மிக்கதாக உள்ளது என விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சினிமாவில் பாடலாமே என்றும் பலர் கேட்கிறார்களாம்.
"ஏற்கெனவே ஒரு படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் பாடல் பதிவின்போது நான் ஊரில் இல்லை. அதனால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டேன். எதிர்காலத்தில் இது சாத்தியமாகலாம்," என்று சொல்லும் தன்ஷிகா, வெற்றி தோல்விகளை ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறாராம்.
வெற்றியைத் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை என்று சொல்பவர், தோல்விகளால் துவண்டு போவதும் இல்லை," என பக்குவமாகப் பேசுகிறார்.
திரைத்துறையில் செலவிடும் ஒவ்வொரு நாளுமே நல்ல அனுபவம்தான் என்று குறிப்பிடுபவர், தினமும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதாகச் சொல்கிறார்.
"யதார்த்தமான கதைக்களங்கள் அமையும்போது என் ஆர்வம் அதிகரிக்கிறது. அதற்காக வணிக ரீதியிலான படங்களில் நடிப்பது சுலபம் என்று கூற மாட்டேன். உண்மையில் வணிகப் படங்களுக்குத்தான் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது.
"மரத்தைச் சுற்றிக் காதல் பாட்டு பாடுவது சுலபம் என்று சொல்வது வழக்கம். ஆனால் அப்படி நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை போகப்போகத்தான் புரிந்துகொண்டேன். அனைத்து வகையான படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம்," என்கிறார் தன்ஷிகா.
வணிக ரீதியிலான படங்கள் என்றாலும் அவற்றின் உள்ளடக்கம் சுவாரசியமானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுபவர், தற்போதுள்ள இளம் இயக்குநர்கள் இந்த விஷயத்தில் கெட்டிக் காரர்களாக உள்ளனர் என்றார்.
"ரசிகர்களைக் கவரக்கூடிய வகையில் சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி இருந்தால் தான் எந்தப் படமும் வெற்றி பெறும். நான் கேட்கும் கதைகளில் இத்தகைய அம்சங்கள் எந்தளவு இடம் பெற்றுள்ளன என்பதை உன்னிப்பாகக் கவனிப்பேன்.
"அதன் பிறகே ஒரு படத்தில் நடிப்பது குறித்து நான் முடிவெடுக்கிறேன். தொடக்கத்தில் எனது சில கணிப்புகள் தவறாகி விட்டன. அதன் பிறகு கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தி உள்ளன. அதனால் கதைகளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் அவசரப்படுவதே இல்லை," என்கிறார் தன்ஷிகா.

