கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழா, 50வது ஆண்டாக இவ்வாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி' எனும் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக திரு ஜவடேகர் தெரிவித்துள்ளார். "இந்த மாபெரும் கௌரவத்தை அளித்ததற்காக மகிழ்ச்சி," என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள திரு ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நடிகர் இஸ்பெல் ஹப்பெர்ட்டுக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது. திரைப்பட விழாவின் அங்கமாக நடைபெறும் விருது நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும். இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட படங்கள், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்படும். அண்மையில் வெளியான தமிழ்த் திரைப்படம் 'ஒத்தசெருப்பு', ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற 'ஹவுஸ்ஓனர்' ஆகிய படங்களுடன் நடிகர் அமிதாப் பச்சனின் எட்டு படங்களும் விழாவில் திரையிடப்படும்.
ரஜினிக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி' விருது
1 mins read
-

