மீரா மிதுன்: கோடி ரூபாய் இழப்பீடு கேட்பேன்

மீரா மிதுன்: கோடி ரூபாய் இழப்பீடு கேட்பேன்

2 mins read
b437f0ba-a321-4fe0-b48e-f56a1a70900b
-

'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் பங்கேற்ற தமக்குச் சல்லிக்காசு கூட சம்பளமாகத் தரப்படவில்லை என்று நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்நிகழ்ச்சியைத் தயாரித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தான் இறுதி எச்சரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிர்வாகத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்தபோதும் பதில் இல்லை என்றும் மீரா தெரிவித்தார்.

'பிக்பாஸ்' நிகழ்ச்ச்சி மனவேதனையைக் கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர், அந்நிகழ்ச்சி முடிந்த 15 நாட்களில் தமக்குரிய தொகையைக் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

ஆனால், 40 நாட்கள் கடந்த பிறகும் தமக்குரிய தொகை வந்து சேரவில்லை என்றும் மீரா வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

"பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக எனக்குப் பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு என்று கூற இயலாது. எனக்கான வழக்கமான சம்பளத்தை விட அத்தொலைக்காட்சியின் தலைவர் கெஞ்சியதால் குறைவான தொகைக்கு ஒப்புக்கொண்டேன். அதையும்கூட தர மறுக்கிறார்கள்.

"அந்த நிகழ்ச்சிக்காக இதுவரை பத்துக் காசுகூட வாங்கவில்லை. அந்நிகழ்ச்சியில் யாருடனும் நான் நட்பாகப் பழகவில்லை. அவர்களுடைய தொலைபேசி எண்கள் என்னிடமோ, எனது தொலைபேசி எண்கள் அவர்களிடமோ இல்லை," என்றார் மீரா.

தன்னுடைய காணொளிகளைப் பயன்படுத்திவிட்டு நிகழ்ச்சி முடிந்தபின் அந்தத் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'வேலை முடிந்து விட்டது. இவள் என்ன பெரிதாகச் செய்துவிடப் போகிறாள்?' என்று அந்நிறுவனம் கருதுவதாகச் சாடினார்.

"இதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'பிக்பாஸ்' வீட்டில் இயக்குநர் சேரனுடன் ஏற்பட்ட பிரச்சினையை மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்துச் சென்றால் மட்டுமே எனக்கான நியாயம் கிடைக்கும் என்றால், அதற்கும் தயாராக இருக்கிறேன். இதுவே எனது இறுதி எச்சரிக்கை.

"அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நானும் நிச்சயம் பெரிய நட்சத்திரம்தான். அதில் பங்கேற்ற மற்றவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன்," என்றார் மீரா.