ரஜினிக்கு விருது: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விளக்கம்

ரஜினிக்கு விருது: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விளக்கம்

2 mins read
20075d8e-7aa3-4822-b155-eb8eda7ab027
அண்மையில் சந்தித்துக்கொண்ட ரஜினி, கமல். படம்: ஊடகம் -

நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்தது தொடர்பாக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் பதிவில், நடிகர் கமலுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனது பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர். அதில், தாம் ரஜினியின் எதிர்ப்பாளரோ, கமலின் ஆதரவாளரோ அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

"திரைப்பட விழாவில் தமிழ்ச் சினிமாவின் அடையாளம் என்கிற அடிப்படையில் வழங்கப்படும் விருது குறித்து மட்டுமே என் கருத்தைச் சொன்னேன். வசூல் மட்டுமே இந்த விருதுக்கான அளவீடாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. தமிழ்ச் சினிமாவுக்கு உலகளாவிய சந்தை உருவானதன் பின்னணியில் நடிகர்கள் மட்டுமே காரணமில்லை, அப்படி ரசிக்கப்பட்ட படங்களின் இயக்குநர்களே முக்கிய காரணம்.

"மத்திய அரசுக்கு இணக்கமாகவே ரஜினி கருத்துகளை வெளியிட்டு வருவதும், தமிழக பாஜகவின் முகமாக ரஜினியைக் கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது.

"சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களைத் தனது படங்களில் கொண்டுவந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே என் பார்வையில் ரஜினியை விடவும் கமல் திரைத்துறை அடையாளமாகத் தெரிகிறார் என்றேன். அதற்காக ரஜினி என்ற தனி மனிதருக்கோ, நடிகருக்கோ நான் எதிரி என்கிற ரீதியில் சாயம் பூச வேண்டாம்," என்று பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியுள்ளார்.