முதன்முறையாக விஜய் சேதுபதியும் ஷ்ருதிஹாசனும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஜனநாதன் இயக்கும் 'லாபம்' படத்தில் இந்த ஜோடியைக் காண முடியும். இது முழுக்க முழுக்க விவசாயம் குறித்தும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் பேசும் படமாம்.
"ஜனநாதன் சார் பெரிய அறிவாளி. 'புறம்போக்கு' படத்தில் நடித்து முடித்ததும் அவரிடம் மனம் விட்டுப் பேசினேன். உங்களுடைய அறிவும் படைப்பும் நாட்டுக்கு மிக அவசியம். சீக்கிரமே அடுத்த படத்தை இயக்குங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் வெளிப்படையாகப் பேசினார்.
"'நான் கருத்துச் சொல்வதை யாரும் காசு கொடுத்துப் பார்க்க மாட்டார்கள். அது மக்களுடைய வேலையும் அல்ல. ஒரு படத்தை எளிமையாக உருவாக்க வேண்டும். அதை ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும்' என்றார்.
"விவசாயம் தொடர்பான தனது பார்வையை அவர் விவரித்தபோது ஆச்சரியமாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார் இணைந்து பணியாற்றலாம் என்று சொல்லியிருந்தேன். அதுதான் இப்போது நடக்கிறது என்கிறார்," விஜய் சேதுபதி.
வழக்கமாக படபடவென வசனங்களைப் பேசுபவர், இந்தப் படத்தில் நிதானத்தைக் கடைபிடித்திருக்கிறாராம். காரணம் ஜனநாதன் படங்களில் வசனங்கள் ரசிகர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்பதுதான்.
ஜனநாதனுடன் இணைந்து பணியாற்றுவது மனதுக்குப் பிடித்த பள்ளியில் பிடித்தமான ஆசிரியரோடு இருப்பதைப் போன்ற அனுபவம் என்கிறார்.
"சினிமாவில் எதை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இப்போது வரை எனக்கு சினிமா புரியவில்லை. கொஞ்சம் குழப்பம் நீடிக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியாக செய்வது போரடிக்கிறது. புதிதாக ஏதேனும் செய்ய முயற்சி செய்து வருகிறேன்.
"இப்போது எனக்கு 40 வயதாகிறது. இப்போதுதான் ஒரு வகை நிதானத்திற்கு வந்திருக்கிறேன்," என்று சொல்பவர், ஷ்ருதியின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.
படத்தில் அவர் தன் காதலைச் சொல்வது போன்ற காட்சியில் அசத்தலாக நடித்ததாகவும் பாராட்டுகிறார்.
"ஜனநாதன் ஒரு பெண்ணைத் தன் படத்தில் நடிக்க வைக்கிறார் என்றால், அது சும்மா வந்து போகும் கதாபாத்திரமாக இருக்காது.
"வலிமையானதாக இருக்கும். ஷ்ருதிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். அதற்கேற்ற நடிப்பை வழங்கியுள்ளார்," என்கிறார் விஜய் சேதுபதி.

