நடுங்கிப் போன அம்ரிதா

நடுங்கிப் போன அம்ரிதா

3 mins read
1ed4e45f-2d67-4a48-bb91-858d55a123aa
-

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது சிறு வயது கனவு என்கிறார் அம்ரிதா.

'பிகில்' படத்தில் தமிழக கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர். இதற்கு முன்பு 'தெறி'யிலும் சில காட்சிகளில் தலைகாட்டியவர்.

'பிகில்' அனுபவங்கள் குறித்துக் கேட்டால், மளமளவென வார்த்தைகளைக் கொட்டுகிறார்.

"சிறு வயதில் நான் பார்த்து ரசித்துப் பிரமித்த ஒரே நடிகர் என்றால் அது விஜய்தான். அவரோடு இரண்டு படங்கள் நடித்து விட்டேன் என்பதையே என் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்.

"'தெறி'யில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தேன். அதன் படப்பிடிப்பின்போது நான் கூடைப்பந்து நன்றாக விளையாடுவேன் என்று இயக்குநர் அட்லியிடம் சொல்லியிருந்தேன்.

"அதை நினைவில் வைத்திருந்துதான் 'பிகில்' பட வாய்ப்பை அளித்தார்.

"இடையில் இரண்டு படங்களில் நாயகியாகவும் நடித்து முடித்துள்ளேன்.

"கூடைப்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம்தான் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது," என்கிறார் அம்ரிதா.

விஜய்யின் தீவிர ரசிகையான தன்னை, அவரைத் திட்டுவது போல் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் அட்லி கூறியபோது நடுங்கிப் போனாராம் அம்ரிதா.

ஆனால் இவரது தயக்கத்தைப் போக்கி அந்தக் காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் விஜய்.

"'தெறி' யில் அவரிடம் பேசுவது போல் எனக்கு ஒரே ஒரு வசனம்தான் இருந்தது. அதைச் சொல்வதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டேன். காரணம், நான் ஒரு வசனத்தைப் பேசும்போது விஜய் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்தால் நமக்கு வசனம் மறந்து போகும். அந்தளவு அவரது பார்வையின் தாக்கம் இருக்கும்.

"அவரை வெறுத்துத் திட்டுவது போன்ற காட்சியில் அவரின் கண்களைப் பார்த்ததும் வசனம் மறந்து போகும். இதை அவரிடமே சொல்லிவிட்டேன்.

"அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, 'சரி உனக்காக நான் கண்களை மூடிக் கொள்கிறேன். நீ நன்றாகத் திட்டலாம்' என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டார். அதன் பிறகுதான் அந்தக் காட்சியில் நடிக்க முடிந்தது," என்று சிரிக்கிறார் அம்ரிதா.

மற்றொரு காட்சியில் விஜய் இவரது தோள் மீது கைபோட்டு சில அறிவுரைகளைக் கூறுவாராம். அந்தக் காட்சி படத்தில் இடம்பெறவில்லையாம்.

"விஜய் சாருடன் நடிப்பதே ஒரு கனவு போல் இருந்தது. இந்நிலையில் அவர் என் தோள் மீது கை போட்டு நடித்தபோது என்னையே மறந்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் காற்றில் மிதப்பது போல் இருந்தது."

நயன்தாராவுடன் நடித்த அனுபவம் குறித்து?

"நயன்தாரா மட்டுமல்ல, அவரது மனசும் மிகவும் அழகானது. படப்பிடிப்பின்போது எனது பிறந்தநாள் வந்தது. அதை அவரிடம் சொல்லாமல் மறுநாள் படப்பிடிப்புக்கு வருவீர்களா? என்று மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரும் நிச்சயம் வருவதாகச் சொன்னார். ஆனால், மறுநாள் அவரைக் காணவில்லை. வேறு படப்பிடிப்புக்குச் சென்று விட்டார்.

"நான் ஏமாற்றம் அடைந்ததைக் கவனித்த இயக்குநர் அட்லி நயன்தாராவிடம் விவரம் கூறியிருக்கிறார். மறுநாள் படப்பிடிப்புக்கு வந்தபோது என்னை அழைத்து வாழ்த்துக் கூறி பிறந்தநாள் பரிசாக ஒரு கைக்கடிகாரத்தைக் கொடுத்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு பெரிய நடிகை மிக சாதாரணமாகப் பேசிப் பழகியதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

"பிகில் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடைபெற்றன. இதனால் தொடர்ந்து பல மாதங்களுக்கு விஜய், நயன்தாராவை அவ்வப்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் எனக் கருதுகிறேன்.

"நயன்தாரா கொடுத்த கைக்கடிகாரத்தையும் விஜய் சார் கொடுத்த மோதிரத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவை இரண்டும் எனக்குப் பொக்கிஷங்கள்," என்கிறார் அமிர்தா.

தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதே தற்போது தமது இலக்கு என்றும் சொல்கிறார்.