'நல்ல அனுபவம் பெற்றேன்'

'நல்ல அனுபவம் பெற்றேன்'

3 mins read
6571e70e-3ca6-409a-aaf7-6a704e43aa33
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தனராம். ஆனால் அவை குறித்து தாம் கவலைப்படுவதே இல்லை என்கிறார் வாணி போஜன். படம்: ஊடகம் -

தொலைக்காட்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகம்தான். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமானவர்.

சின்னத் திரையில் அசத்திக்கொண்டிருந்தவர் தற்போது 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரை நாயகியாகி உள்ளார். இது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகும் படம் என்பது கவனிக்கத்தக்கது.

எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டால் வாணி போஜனின் பளீர் புன்னகையில் அழகான பல்வரிசை மினுமினுக்கிறது.

"படத்தில் நடிப்பது என்று தீர்மானித்தவுடன் சக நடிகர்கள் குறித்துதான் முதலில் விசாரித்தேன். அதன் பிறகே முழுக் கதையையும் படித்து முடித்தேன்.

"இந்தக் கதை மட்டுமல்ல, எனக்கான கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் இது தனித்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். இரு நாயகிகளில் நானும் ஒருவள்.

"முக்கிய நாயகியாக ரித்திகா நடிப்பதாகத் தெரிவித்தனர். இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது," என்கிறார் வாணி போஜன்.

ரித்திகா சிங் தேசிய விருது பெற்ற நடிகை, தன்னை விடப் பிரபலமான நடிகை என்ற போதிலும் அவர் கொஞ்சம் கூட பந்தா செய்யவில்லை என்று குறிப்பிடும் வாணி, அவரது நடிப்பு பிரமாதம் என்று பாராட்டுகிறார். இருவரும் பல காட்சிகளில் இணைந்து நடித்துள்ளனராம்.

"தேசிய விருது வாங்கியுள்ள திறமைசாலி அவர். ஆனால், அதுகுறித்த எந்த ஒரு கர்வமும் பந்தாவும் அவரிடம் தென்படவில்லை. என்னவோ நான்தான் அவரை விட மூத்த நடிகை என்பதுபோல் எனக்கு முக்கியத்துவம் அளித்தார். படப்பிடிப்பு முடிவதற்குள் இருவரும் ரொம்ப நெருக்கமாகிவிட்டோம்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் வாணி போஜன்.

ரித்திகா சிங் தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக இயல்பான, அழகான நடிப்பை வெளிப்படுத்துவதாகச் சொல்பவர், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் வேறு எந்த நடிகைக்கும் பொருந்தாது என்கிறார்.

படப்பிடிப்புக்கு வாணி அணிந்து வரும் உடை தனக்கும் பிடித்திருந்தால் உடனே நெருங்கி வந்து ரொம்ப அழகாக இருக்கிறது என்பாராம்.

திரையில் எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமல்ல என்று குறிப்பிடுபவர், நமக்கான நேரத்தில் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை எவ்வளவு கச்சிதமாக வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்கிறார்.

தான் நடித்த படத்தை தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரித்தது பெரும் மகிழ்ச்சி அளித்திருப்பதாகச் சொல்கிறார்.

"நான் படப்பிடிப்புக்கு வராத ஒரு நாளில் அவர் வந்திருந்தார். இதையடுத்து இயக்குநர் தொலைபேசியில் தகவல் தெரிவித்து உடனடியாக நேரில் வருமாறு கூறினார். நேரில் அவரைச் சந்தித்ததும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

"ஆனால் அவரோ என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதாகச் சொன்னதுடன் சகஜமாகப் பேசினார். அவரது எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதற்கு முன்பு ஒரு விருது விழாவில்தான் அவரை நேரில் பார்த்தேன். தொடக்கத்தில் என்னைக் கடந்து போனவர், திரும்பி வரும்போது எப்படி இருக்கீங்க என்று கேட்டு நலம் விசாரித்துச் சென்றார்," என்கிறார் வாணி.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தனராம். ஆனால் அவை குறித்து தாம் கவலைப்படுவதே இல்லை என்கிறார்.

எப்போதுமே மற்றவர்கள் சொல்வதை தலையில் ஏற்றிக்கொள்ளக் கூடாது என்பதே வாணியின் கொள்கையாம். நேர்மறை, எதிர்மறைக் கருத்துகள் எல்லா விஷயத்திற்கும் எப்போதும் வந்தபடி இருக்கும் என்பதால் அவற்றுக்காக நேரத்தை வீணடிக்கக் கூடாது என்கிறார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நிலையில், வெள்ளித்திரைக்கு வருவது என முடிவான பின்னர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வீட்டில்தான் இருந்தாராம். அந்தச் சமயத்தில்தான் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததாம்.