ஸ்ரீபிரியங்கா: காதல் என்பது 99% பொய்

நான் பெற்றோர் பார்க்கும் மணமகனைத்தான் மணம் முடிப்பேனே தவிர என் திருமணம் காதல் திருமணமாக இருக்காது என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீபிரியங்கா.

“பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தைத்தான் நான் விரும்புகிறேன். காதலில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை.

“காதல் என்று கூறிக்கொண்டு ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒருவரை ஒருவர் ஏமாற்றி வருகின்றனர். பணமே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. 

“என்னைப் பொறுத்தவரையில் நூற்றில் 99% காதல் பொய்யாகவே இருக்கிறது. 1% மட்டுமே உண்மையாக இருக்கிறது. அந்த 1% காதலையும் காதலரையும் தேடி என் நேரத்தை நான் வீணடித்துக் கொள்ள விரும்ப வில்லை,” என்று கூறியுள்ளார் ‘மிகமிக அவசரம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா.

தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்து  திரைச்செய்தி ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் கல்லுாரியில் முதலாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தபோது  திரை வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. 

“இந்த வாய்ப்பைத் தவறவிட மனமின்றி உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். தற்போது தொலைதூரக்கல்வி மூலம் பி.காம். படித்துவருகிறேன். 

“எனது முதல் படமே நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. 

“அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி பொம்மையாக வந்துபோகும் கதைகளாக இல்லாமல் கருத்துள்ள படங்களில் நடிக்கவேண்டும். 

“நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் மக்களுக்கு பாடம் போதிக்கும் கதையம்சம் உள்ள படமாக குறிப்பாக, அரசிய லின்றி இருக்கவேண்டும் என விரும்புகிறேன். 

“நடிகைகள் ‘போட்டோ ஷூட்’ நடத்துவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் என் கருத்துக்கு இடமில்லை. அதுபோல் நான் வாய்ப்பு எதையும் தேடவில்லை.

“திரைத்துறையில் பெண்களுக்கு சுதந்திரம் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். வாய்ப்பு கொடுத்தால்தானே சுதந்திரம் பற்றி பேசமுடியும். இங்கு வாய்ப்புக்கே முன்னுரிமை தரப்படுவதில்லை.

“நல்ல படங்களில் நடித்துவிட்டு குடும்பத்தோடு ‘செட்டில்’ ஆக உள்ளேன். இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். இதை விளம்பரத்திற்காகச் சொல்லவில்லை,” என்கிறார் ஸ்ரீபிரியங்கா.