'கைதி', 'பிகில்' வெற்றி, தோல்வி அலசல்

'கைதி', 'பிகில்' வெற்றி, தோல்வி அலசல்

2 mins read
a8d15313-80c2-4341-80c4-30022a410b12
-

தீபாவளி சமயத்தில் 'பிகில்', 'கைதி' ஆகிய இரு படங்களும் வெளியான முதல்நாளே 'கைதி'தான் விமர்சன ரீதியாக நிறைய பாராட்டுகளைப் பெற்றது.

'பிகில்' படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் விஜய் ரசிகர்களால் அது வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

'கைதி' தயாரிப்புத் தரப்பு எதிர்பார்த்ததைவிடவும் அதிக வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அளித்துள்ள பேட்டியில், "பிகில் படம் லாபகரமான படம் என்று யார் சொன்னது? அந்தப் படம் அதிகப்படியான வசூல் செய்ததாக பத்திரிகையாளர்களால் பொய் செய்தி பரப்பப்படுகிறது.

"பிகில்' திரைப்படத்தின் உண்மையான வசூலைக் கண்டு அதன் தயாரிப்பாளர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்," என்றார்.

'பிகில்', 'கைதி' படங்களின் வர்த்தக நிலவரம் குறித்து விநி யோகிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், "தீபாவளிக்கு வெளியான 'பிகில்', 'கைதி' இரண்டுமே நல்ல ஓட்டம்தான்.

"கைதிக்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் இருப்பதால் படம் லாபத்தில் ஓடுகிறது.

"பிகில் படத்தை வாங்கிய விநியோகிப்பாளரின் கையைக் கடிக்காமல் உள்ளது. போட்ட பணம் அப்படியே வந்துவிட்டது. ஆனால், பெருந்தொகையை முதலீடு செய்து அது போட்ட அளவிலேயே பணம் திரும்பி வருவதற்கு ஏன் இந்தத் தொழில் செய்யவேண்டும், லாபம் கிடைக்க வேண்டாமா? நல்ல லாபம் கிடைத்தால்தானே விநியோகிப்பாளர் தொடர்ந்து இந்தத் தொழிலில் இருப்பார்கள்.

"ஒருசில படங்கள் வெறும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்படுவதுதான் பிரச்சினை. அந்த நிலைமை மாறவேண்டும்.

"எல்லாத் தரப்பினருக்குமான படங்களை எடுத்தால்தான் திரையரங்குக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வருவார்கள். தமிழ் சினிமா நாயகன்கள் இதைக் கவனத்தில்கொள்ளவேண்டும்.

"விஜய் மாதிரி ஒரு பெரிய நடிகரின் படத்தை ஏராளமான மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால், எல்லாத் தரப்புக்குமான படமாக இருந்தால் அதன் கலெக்‌ஷன் எங்கேயோ போய்விடும். கதாநாயகர்கள் தங்கள் புகழ்பாடும் படங்களில் நடிப்பதை விடுத்து நல்ல கதைகளில் நடிக்கவேண்டும்.

சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' தனுஷின் 'அசுரன்' படங்கள் நல்ல ஓட்டம் எனும்போதே மக்களின் எதிர்பார்ப்பு புரிந்துவிடும். நல்ல கதைகளையும் உணர்வுகளையும் தேடி திரை யரங்குக்கு வரும் மக்களுக்கு அதைக் கொடுக்கவேண்டியது நம் நாயகன்களின் கடமை," என்றார்.