தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கிவரும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'ஆதித்ய வர்மா'.
இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள பனிதா சந்துக்கு குறைவே இல்லாத வகையில் முத்தம் கொடுத்து நடித்துள்ள துருவ் விக்ரம், இது குறித்து கூறியுள்ள விளக்கம் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.
"நாயகியுடன் வரும் முத்தக் காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் போன்றவைதான். என்னைப் பொறுத்தவரை இவை இரண்டும் ஒன்றே.
"நடிக்க வந்துவிட்டால் அனைத்து வகையான காட்சிகளிலும் நடிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். இது முடியாது அது முடியாது என்றால் உன்னால் எதுவும் முடியாது என்று என்னை ஓரங்கட்டி ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விடுவார்கள். அதனால் நான் எந்தக் காட்சியிலும் நடிப்பதற்குத் துணிந்து இறங்கிவிட்டேன்.
"என் அப்பா விக்ரமின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர் வாழ்க்கையில் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவரைப் போன்று நானும் உழைப்பில் அதிக அக்கறை காட்டுவேன்," என்கிறார் துருவ்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மறுபதிப்புதான் ஆதித்ய வர்மா.
கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பாலிவுட் நடிகை பனிதா சந்து உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் ஒருசில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் அதீத நம்பிக்கையுடன் உள்ளேன். ஒரு தந்தை தனது மகன் பள்ளியில் நடந்த போட்டியில் வெற்றிபெற்று மேடையேறும்போது எப்படி படபடப்பாக இருக்குமோ அதுபோல் எனக்கு உள்ளது,'' என்று கூறியுள்ளார் விக்ரம்.
"இந்தப் படத்துக்கு சென்சார் குழு 'ஏ' சான்றிதழ்தான் தரமுடியும் எனக் கூறியுள்ளது. ஆனால் இதை குடும்பமாக வந்து பார்க்கும் வகையில் எப்படியாவது 'யு/ஏ' சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் விக்ரம். இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம்'' என்று ஒரு முன்னணி தயாரிப்பாளர் தெரிவித்தார்.
"தயாரிப்பு நிறுவனம் சொல்கிற விலைக்கு இந்தப் படத்தை வாங்கப் பலரும் மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே வெளியீடு செய்யும் முடிவில் இருக்கிறார் விக்ரம். ஆனால், திரையரங்குகள் கிடைக்கவில்லை. 'பிகில்' படம் இன்னும் கொஞ்ச நாள் திரையரங்குகளில் ஓடினால்தான் லாபம் கிடைக்கும்.
"அத்துடன் 'கைதி'க்கும் இன்னும் கூட்டம் வருவதால் இரண்டு வாரங்கள் இந்தப் படங்களை ஓட்டியே ஆகவேண்டும் என திரையரங்குகள் தரப்பினர் சொல்கிறார்கள். அதனால்தான் படம் நவம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளிப்போயிருக்கிறது," என்று கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

